பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

263

காண இயலாதவர்கள், முன்னால் எழுந்தருளப் பண்ணியிருக்கும் உற்சவ மூர்த்தத்தில் கண்டு மகிழலாம். நரசிம்மன் வெறும் லக்ஷ்மி நரசிம்மனாக மட்டும் இல்லை , சீதேவி பூதேவி சகிதமே எழுந்தருளியிருக்கிறார்.

இந்தக் குடைவரையில் காண வேண்டியவர் இந்த நரசிம்மர் மாத்திரம் அல்ல. இன்னும் திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்த நாரணர் எல்லாம் மூலமூர்த்தியின் இருமருங்கும் பெரிய பெரிய வடிவங்களில் இருக்கின்றனர். எல்லாம் கல்லைக் குடைந்து கனிவித்த வடிவங்கள் என்றால் நம்பவே முடியாது; அத்தனை அழகு ஒவ்வொரு வடிவிலும். 'ஊன் கொண்டவன் உகிரால் இரணியன் தன் உடல் கிழிக்கும்' கோலம் கொஞ்சம் அச்சம் எழுப்புவதாகவே இருக்கும். இங்குள்ள சித்திர வடிவங்களில் சிறப்பானவை அனந்த நாராயணனது வடிவந்தான். பன்னக சயனனாக இருந்தவர் எழுந்து கம்பீரமாக அனந்தனையே ஆசனமாகக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். தேவர்களெல்லாம் தொழுத கையினராக இருந்தும், நின்றும் ஏவல் கேட்கிறார்கள், திரிவிக்கிரம சரிதம் முழுவதுமே கல்லில் வடித்திருக்கிறான் சிற்பி, வாமனனாக வந்து மாபலியிடம் தானம் பெறுவதும், பின்னர் வாமனன் வளர்ந்து திரி விக்கிரமனாக உயர்வதும் கண்கொள்ளாக் காட்சி.

இவர்களைப் போலவே பூமிதேவியைத் தாங்கிவரும் வராகரும். இவர்களை எல்லாம் காண்பதன் மூலம் தமிழ் நாட்டின் சிற்பக் கலைவளம், கிட்டத்தட்ட ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் எவ்வளவு சிறந்திருந்தது என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? நரசிம்மரைத் தொழுதபின் நாமகிரித் தாயார் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். நரசிம்மர் மேற்கு நோக்கியிருந்தால் நாம கிரித் தாயார் கிழக்கு நோக்கியிருக்கிறாள். நிறைய அணிகள் பூண்டு, பட்டாடை உடுத்தி, ஊரின் பெயருக்கு ஏற்ப நல்ல நாமமும் தரித்துக் கம்பீரமாகவே கொலு இருக்கிறாள். இவள்