பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வேங்கடம் முதல் குமரி வரை

என்கிறார்கள். ஆழ்வார் சொல்லிய வண்ணம் செய்ததால் பெருமாளுக்கு ஆரா அமுதாழ்வார் என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள். திருமழிசை ஆழ்வார், பிறந்து வளர்ந்ததுதான் திருமழிசையே தவிர அவர் தங்கியிருந்து தவம் இயற்றிப் பெருமாளின் திருவடி சேர்ந்தது. இந்தக் குடந்தை நகரிலேதான். அதனாலேதான் இந் நகரைத் திருமழிசைப், பிரான் உகந்த இடம் என்று வைணவர்கள் போற்றுகிறார்கள், அவரைக் குடமூக்கின் பகவர் என்றும் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன.

ஆரா அமுதனை நம்மாழ்வார் எப்படிப் பாடிப் பரவினார் என்பதை முன்னரே பார்த்தோம். ஆண்டாளுக்கும் ஆரா அமுதனிடத்து அளவு கடந்த ஈடுபாடு என்று அறிகிறோம், கண்ணன் என்னும் கருந்தெய்வக் காட்சியில் தன் வயம் இழந்து கிடந்த அந்த ஆண்டாள்,

ஆரே உலகத்து ஆற்றுவார்?
ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
தளர்ந்து முறிந்தும் கிடப்பேனை,
ஆரா அமுதம் அனையான்தன் -
அமுதவாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பை நீக்கீரே.

என்றல்லவா பாடுகிறார். இப்படித்தான் குடந்தை கிடந்த குடமாடியிடம் நீலார் தண்ணத் துளாய்க்கு ஏங்கிக் கிடக்கிறாள் ஆண்டாள். இப்படியெல்லாம் நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஆண்டாள் எல்லாரும் பாட, திருமங்கைமன்னன் கம்மா இருப்பாரா? திரு அழுந்தூர் - சென்று அங்குள்ள திருவுக்கும் திருவாகிய செல்வனைக் - கண்டபோது,