பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/284

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

வேங்கடம் முதல் குமரி வரை

மாதிருக்கும் பாதியன், அந்த அர்த்தநாரியை நினைத்தால் அந்த மூர்த்தியைக் கற்பனை பண்ணிய கலைஞனை நினைக்கிறோம். சொல்லிலும் கல்லிலும் அம் மூர்த்தியை உருவாக்குவதில்தான் எவ்வளவு சிந்தனைத் திறன்? மனித உடம்பின் அமைப்பையும் பார்ப்போமானால் ஒவ்வோர் உடம்பும் இரு வேறு ஒட்டுகளாக அமைக்கப் பெற்றிருத்தல் விளங்கும். ஆணும் பெண்ணும் ஒன்றுகின்ற வகையில் அன்றி, ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய எந்த உயிருமே சிருஷ்டிக்கப் படுவதில்லையே. இப்படி சிருஷ்டிக்கப்படும் உயிரும் உடலும் தத்தம் தாயும் தந்தையுமாய் இருவகை இயல்புகளும் பொருந்தி நிற்க வேண்டுவதுதானே. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் இறைவனை அந்த உருவில், ஆம்! பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் வழிபடுவதில்தான் எத்தனை பொருத்தம். அப்படி இறைவனை அர்த்தநாரியாக, மாதிருக்கும் பாதியனாக, பஞ்சின் மெல்லடியாள் பாகனாக, வழிபடும் தலம்தான் திருச்செங்கோடு என்னும் கொடிமாடச் செங்குன்றூர். அந்தத் திருச்செங்கோடு என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

அர்த்ததாரி