பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

வேங்கடம் முதல் குமரி வரை

பெரிய கோயில்தான், கோயிலின் பெருந்திரு வாயிலே 76 அடி உயரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இங்கு கைலாய நாதரும் அவரது துணைவி பரிமளவல்லியும் தனித் தனிக் கோயிலில் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே ஒரு சிறு கோயிலில் சுப்பிரமணியர் நிற்கிறார். இவர் ஆறுமுகவன் அல்ல. தலையில் திருமுடியும் கரத்தில் வேலும் தாங்கிய கோலத்தில் இருக்கிறார். இவர்களையும் இத்தல விநாயகரான பட்டி விநாயகரையும் வணங்கிப் பின்னரே மலை ஏற முற்படலாம். அப்போதுதானே உடலில் மாத்திரம் அல்ல, உள்ளத்திலும் வலுவோடு மலை ஏற முடியும்.

சரி, இனி மலை ஏறத் தொடங்கலாமா? அதற்கு முன் இத்தலத்தைக் கொடிமாடச் செங்குன்றூர் என்றும் இங்குள்ள மலையை நாககிரி என்றம் ஏன் அழைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ளலாம், கொடிகளை வீசும் மாட மாளிகைகள் நிறைந்த சிவந்த மலையை உடையதால் கொடிமாடச் செங்குன்றூர் என்று பெயர் பெற்றிருக்க வேணும். நமக்குத்தான் தெரியுமே, அந்த வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் நடந்த போட்டி மகா மேருவை ஆதிசேடன் தன் படத்தை விரித்து மூடிக்கொள்கிறான், வாயுவோ மேருவைப் பெயர்க்கும் வண்ணம் வீசுகிறான். வாயுவின் வேகம் தாங்காமல் சர்ப்ப அரசன் தன் படத்தைச் சற்றே மேலே தூக்கியிருக்கிறான் சிறிது மூச்சு வாங்க. அவ்வளவுதான்; மேருவின் சிகரங்களில் ஒன்று பிய்த்துக் கொண்டு வந்து விழுந்திருக்கிறது. இங்கே அத்துடன் சேடனது வாயின் இரத்தம் பட்டுச் சிவந்த குன்றாகவே அது இருந்திருக்கிறது. இதனாலேயே செங்கோடு என்றும் நாககிரி என்றும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

அடிவாரத்தில் கஜமுகப்படி விநாயகர் முதற் படியிலேயே ஒர் இழுவை மரத்தடியில் இருக்கிறார். அவரை வணங்கிவிட்டே மலை ஏறவேணும். அதன்பின் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் திருமடம், திரு முடியார் மண்டபம் எல்லாம் படியேறிக் கடக்கவேணும். இங்கேதான்