பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

273

கற்பாறையிலே, நாககிரி என்ற பெயருக்கு ஏற்ப அறுபதடி நீளத்தில் பெரிய உருவில் ஐந்து தலைப் பாம்பு ஒன்றைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். பாம்பின் படத்தின் நடுவிலே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த நாகசிலைப் பக்கத்திலுள்ள சிறு மண்டபத்திலிருந்து சுமார் 200 படிகளைக் கடந்தால் செங்குந்த சின்ன முதலியார் மண்டபம் வரும். அதன்பின் சிங்கத்தூண் மண்டபம். இதையும் கடந்த பின்பே அறுபதாம் படி என்னும் சத்தியப் படிகள். பிற தலங்களில் பதினெட்டாம் படியென்றும், கருப்பன் என்றும் கூறும் இடத்தைப் போன்றது இது. ஏதாவது தீராத வழக்கென்றால், வாதிடுபவர்கள் இந்த அறுபது படிகளையும் ஏறி, தான் சொல்லுவது எல்லாம் சத்தியம் என்று அந்தப் படிகளின் பேரில் உள்ள முருகக் கடவுள் அறியச் சொல்லவேணும். இன்றும் இச்சத்திய முறை நடக்கிறது.

இந்த அறுபதாம் படிமேல் எல்லையில் இருக்கும் முருகனை அன்றே அருணகிரியார் சத்திய வாக்கியப் பெருமாள் என்று அழைத்து திருப்புகழ் பாடியிருக்கிறார். நாம் சத்தியம் ஒன்றும் செய்யா விட்டாலும், சத்திய வாக்கியப் பெருமானுக்கு வணக்கம் செலுத்தும் வாக்கில் கொஞ்சம் அங்குள்ள மண்டபத்தில் தங்கியிருந்து இளைப்பாறி மேலும் நடக்கலாம், அதன் பின் செட்டிக் கவுண்டன் மண்டபம், தேவரடியான் மண்டபம், இளைப்பாறு மண்டபம் எல்லாம் கடந்தே கோபுர வாசல் மண்டபத்துக்கு வந்து சேரவேணும். அங்கும் கொஞ்சம் இருந்து இளைப்பாறிக் கொண்டே கோயிலுள் செல்லலாம். இந்த மண்டபத்தை ஒரு பெரிய கோபுரம் அழகு செய்கிறது. அந்த மண்டபத்துக்கே கீழ்ப்புறம் இருபது படிக்கட்டுகள் கீழ் இறங்கியே கோபுரத்தின் பிரகாரத்துக்கு வரவேணும். இனி அக்கோயிலை வலம் வர முனைந்தால் முதல் முதல் நாம் வந்து சேருவது செங்கோட்டு வேலவர் சந்நிதிதான். அவன் பாலசுப்பிரமணியன், இவன் மிகவும் அழகு வாய்ந்தவன். அவன் அழகினைக்கண்டே அருணகிரியார்,