பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

வேங்கடம் முதல் குமரி வரை

நிற்க முடிந்தது என்பது மற்றொரு கேள்வி. பரந்த வெளியிலே நடக்கும் போரிலே, வாலி காணாது மறைந்து நிற்க ராமனால் இயலுமா என்பது, ராம காதையில் நம்பிக்கையற்றவர்களது வாதம்.

இந்த இரண்டாவது கேள்விக்கு விடை காணவேண்டுமானால் தாரமங்கலத்துக்குப் போக வேண்டும். அங்குள்ள சிற்ப வடிவங்களில் வாலி-ராமன் சிலைகளைக் காண வேண்டும். இரண்டு வடிவங்களையும் இரண்டு தூண்களில் செதுக்கி வைத்திருக்கிறான் சிற்பி. என்றாலும் ராமனது வடிவம் இருக்கின்ற இடத்திலிருந்து பார்த்தால் வாலியின் வடிவம்நன்றாகத் தெரிகிறது. ஆனால் வாலி வடிவம் இருக்கும் தூண் பக்கம் நின்று ராமனைப் பார்த்தால் பார்க்க முடிவதில்லை. இந்த நிலையிலே தூண்களையும் அந்தத் தூண்களில் வடிவங்களையும் அமைக்கத் தெரிந்திருக்கிறான் அச்சிற்ப வடிவங்களை அமைத்த கலைஞன், இந்த வடிவங்களை மாத்திரம் அல்ல, இன்னும் எண்ணற்ற சிற்பச் செல்வங்களைக் காணும் ஆவல் உடையவர்களெல்லாம் செல்ல வேண்டிய கோயில்தான் தாரமங்கலத்திலுள்ள கைலாச நாதர் கோயில், அந்தக் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

தாரமங்கலம் சேலம் ஜில்லாவில் ஓமலூர் தாலூக்காவில் உள்ள சிறிய உர். சேலத்துக்கு நேர் மேற்கே பதினாறு மைல் தொலைவில் இருக்கிறது. சேலம் ஜங்ஷனில் இறங்கி, பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். இல்லை என்றால் சேலம் மேட்டூர் அணை ரயில் பாதையில் ஓமலூர் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு தென் மேற்காக ஆறு மைல் சென்றாலும் செல்லலாம். சேலம்-மேட்டூர் அணை ரயில் வழியாகப் போவதைவிடச் சேலம் ஜங்ஷனில் இறங்கி பஸ்ஸில் போவதே வசதியானது, ஊர் வந்து சேர்ந்ததும் கோயிலுக்குச் செல்லலாம்.