பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

வேங்கடம் முதல் குமரி வரை

வட்டாரத் தலைவனாக இருந்தவன் கெட்டி முதலி என்பவன். இக்கோயில் கட்டும் பணியில் இவனுக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் எல்லமன், நல்லுடையப்பர் முதலியோர். இவர்கள் கோயிலுக்கு எட்டு கிராமங்களையே எழுதி வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் இப்போதே ஏன் சொல்கிறேன் என்றால், கோயிலுள் நழைந்து அங்குள்ள சிற்பச் செல்வங்களைக் கண்டு களிக்க ஆரம்பித்து விட்டால், மற்றைய விஷயங்களிலெல்லாம் மனம் செல்லாது. அதற்காகவே கோயில் ஏற்பட்ட வரலாற்றை முதலிலேயே சொல்லிவிட முனைகிறேன்.

இனி இவ்வூருக்குத் தாரமங்கலம் என்று ஏன் பெயர் வந்தது என்று கேட்பீர்கள், தண்டகாரண்யம் என்றீரே, இதை அடுத்துத்தான் கிஷ்கிந்தை இருந்ததோ? அந்தக் கிஷ்கிந்தை மன்னன் வாலியின் மனைவி தாரையின் பெயரால் ஏற்பட்ட ஊரோ?' என்றுதானே சந்தேகிக்கிறீர்கள். அப்படி, வானர வீரன் வாலியின் மனைவி தாரைக்கும் இந்த ஊருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தாராகணங்களான நக்ஷத்திரங்கள் எல்லாம் வழிபட்ட தலம் ஆனதால் தாரமங்கலம் என்பர். இதுகூடச் சரியான வரலாறு அல்ல. கயிலையில் வாழ்ந்தாலும், இந்தப் பரமசிவனுக்கு உகந்த இடமாகத் தமிழ்நாடுதான் இருந்திருக்கிறது. அவர் தம் திருமணத்தை இந்தத் தமிழ் நாட்டிலே நடத்திக் கொள்ளத்தான் ஆசைப்பட்டிருக்கிறார். அப்படி இறைவன் விரும்பிய திருமணத்தை நடத்திக் கொடுத்தவர் மகாவிஷ்ணு. தன் தங்கையாகிய பார்வதியை முறைப்படி கயிலாயநாதருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துத் திருமணம் முடித்து வைத்த தலம் ஆனதால் தாரைமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கிறது. தாரைமங்கலமே தாரமங்கலம் என்று குறுகியிருக்கிறது பின்னர். இனிக் கோயிலுள் செல்லலாம்.

மேற்கு நோக்கிய கோயில் வாயிலை ஐந்து நிலைக்கோபுரம் ஒன்று அழகு செய்கிறது. தமிழ் நாட்டில்