பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

283

தாரமங்கலம் கோபுரம்

மதுரை போன்ற நகரங்களில் உள்ள கோபுரத்தின் காம்பீர்யத்தை இங்கே காண முடியாது. ஏதோ சட்டிபோல் அடியில் பெருத்து மேலே அளவுக்கும் அதிகமாகக் குவிந்தே காணப்படும். கோபுரத்தை விட, கோபுர வாயிலை அடைத்து நிற்கும் மரக் கதவு அழகானது. அந்தக் கதவில் 120 இரும்புக் குமிழ்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்றால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். கோபுரத்தை வெளியிலிருந்து பார்ப்பதைவிடக் கோயிலுள் நுழைந்து மேற்கே திரும்பிப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபுரம் ஒரு தேர் போலவும் அதை இரண்டு பக்கத்திலும் இரண்டு யானைகள் இழுத்துப் போவது போலவும் அமைத்திருக்கிறார்கள். கோயில் மதில் நீண்டு உயர்ந்தது. கோயிலின் வடமேற்கு மூலையில் சகஸ்ரலிங்கம் இருக்கிறது. இங்கேயே தல விநாயகரும், அவிநாசி அப்பரும்வேறே கோயில் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இந்த வெளிப் பிரகாரத்திலேயே மூன்று விநாயகர் சந்நிதிகள். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர்கள், கெட்டி முதலி, முடிகெட்டி முதலி, மும்முடிக் கெட்டி முதலி என்பர். எல்லோரும் ஒரு குடும்பத்தினர் என்றாலும் எல்லோருக்கும் விநாயகரிடத்திலே ஈடுபாடு இருந்திருக்கிறது. ஆகவே தனித் தனியாக விநாயகரைப் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.