பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

285

சந்நிதியில் உள்ள நந்தியின்கொம்புகளின் இடைவழியாகச் சென்று இறைவனது லிங்கத் திருவுருவில் விழுகிறது. இதை நாம் மற்றும் பல தலங்களிலும் பார்த்திருக்கிறோம் என்றாலும் நந்தியம் பெருமானின் கொம்புகளின் இடைவழியாய் ஒளி வருவது இத்தலத்தில் மட்டுந்தான். இந்த இறைவனை வணங்கிய பின் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றலாம். அங்கு தானே தாரைமங்கலத்துக்குப் புகழ் பெற்ற சிற்ப வடிவங்கள் இருக்கின்றன? அதற்கும் முந்தி அம்பிகையாம் சிவகாமி அம்மையையும் தரிசித்து விடலாமே. அவளது கோயில் சுவாமி சந்நிதிக்கும் வடக்கே கிழக்கு நோக்கியிருக்கிறது. நல்ல அழகொழுகும் வடிவம். அந்தச் சந்நிதிக்கும் தெற்கேதான் ஆறுமுகனும் தனித்தொரு கோயிலில் இருக்கிறான். இவர்களையும் வலம் வந்து பின்னர், வடக்குப் பிரகாரத்துக்கு வரலாம். அங்குதான் இறைவன் பிக்ஷாடனக் கோலத்தில் வருவதையும் அவருக்குப் பிச்சையிட வந்த ரிஷிபத்தினிகள் எல்லாம் கலை இழந்து நிற்பதையும் காணலாம். இவர்களில் ஒருத்தி,

சொல்நலம் கடந்த காமச்சுவையை
ஓர் உருவமாக்கி
இன்நலம் தெரிய வல்லார்
எழுதியது என்ன நின்றாள்
பொன்னையும் பொருவு நீராள்
புனைந்தன எல்லாம் போக
தன்னையும் தாங்க லாதாள்
துகில் ஒன்றும் தாங்கிநின்றாள்.

என்று கம்பன் வர்ணிக்கும் மிதிலை நகர்ப் பெண் போலவே நிற்கிறாள். நழுவும் சேலையைப் பிடித்துக்கொண்டுஅவள் வரும் அழகையே வடித்திருக்கிறான் சிற்பி கல்லில். இன்னும் இந்த வடக்குப்பிரகாரத்திலே தான் காஞ்சி காமாட்சியும் ரிஷபவாகனாருடரான கயிலாயநாதரும் காட்சி கொடுப்பர்.