பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31. பவானி சங்கமேஸ்வரர்

னது நண்பர் ஒருவர் நல்ல தமிழ்ப் புலமை உடையவர். கவி பாடுவதில் சமர்த்தர். எந்தப் பொருளைப் பற்றி, எப்போது என்ன கவி பாடவேண்டும் என்றாலும் பாடக் கூடியவர் அவர். ஒரு நாள் அவரை அழைத்துக்கொண்டு ஒரு பிரபல அறிஞரைக் காணச் சென்றேன் நான். அறிஞரிடம் நண்பரை அறிமுகப்படுத்தி அவர் கவிபாடும் திறமையைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன். தம் புகழ் கேட்டு நண்பர் நாணிக் கோணித் தலை கவிழ்ந்தார். நான் சொன்னதையெல்லாம் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் கடைசியில் கவிஞரைப் பார்த்து, “காகம் கா-கம்பி கம்பி-கம்” என்பதைக் கடை யடியாக வைத்து ஒரு வெண்பாப் பாடும் பார்ப்போம்" என்றார். நண்பர் 'பர, பர' வென்று விழித்தார் கொஞ்சம் நேரம்.

அவரது சங்கடத்தை உணர்ந்த நான் அவர் காதில் மெதுவாக, “பயப்படாதீர்கள். கடையடியைச் சொல்வதில் தான் அத்தனை படாடோபம். பிரித்துச்சொன்னால் 'காகம் காகம், பிகம் பிகம்' அவ்வளவுதான், பிகம் என்றால்