பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

வேங்கடம் முதல் குமரி வரை

முக்கூடலில். அந்தச் சங்கமத்தில் சென்று முங்கி எழுந்தால் எவ்வளவு புண்ணியம்? கங்கையும் யமுனையும் கலக்கும் இடத்திலே சரஸ்வதி நதி அந்தர் வாகினியாகக் கலப்பது போலவே, இங்கே காவிரியும் பவானியும் கூடுதுறையிலே அமுத நதியும் அந்தர்வாகினியாகக் கலந்து இதனையும் ஒரு நல்ல திரிவேணி சங்கமம் ஆக்கிவிடுகிறது. அந்தக் கூடுதுறையில்தானே சங்கமேசுவரராம் இறைவன் வேறே கோயில் கொண்டிருக்கிறான்' என்று, இதையெல்லாம் கேட்ட அறிஞர் கவிஞரோடு சேர்த்து என்னையுமே பாராட்டினார். இந்தப் பாராட்டுதல்களுக்கு எல்லாம் காரணமாயிருந்த பவானி முக்கூடலுக்கே, அங்குள்ள சங்கமேசுவரர் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

பவானி செல்வதற்கு, ரயிலில் செல்பவர்கள் ஈரோடு ஜங்ஷனில் இறங்க வேண்டும். அங்கிருந்து பதினோரு மைல் நேர் வடக்கே பஸ்ஸிலோ காரிலோ, இல்லை, குதிரை பூட்டிய ஜட்கா வண்டியிலோ செல்லவேண்டும். சொந்தக் கார் வைத்துக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்புபவர்கள் சேலம் - கோவைப் பெருஞ்சாலை வழியாகவும் வரலாம். சேலம் வழியாக வடக்கே இருந்து வந்தால் காவிரியைக் கடந்து ஊர் வந்து சேரவேணும். கோவையிலிருந்து வடக்கு நோக்கி வந்தால் பவானியாற்றைக் கடந்துதான் ஊர் வந்து சேரவேணும், ஆறுகளைக் கடப்பதற்கு நல்ல பாலங்கள் இருப்பதால் எளிதாகவே வந்து சேரலாம். இனிக் காவிரியும் பவானியும் கலக்கும் அந்த முக்கூடல் சங்கமத் துறைக்கே வரலாம்: அங்குதானே காவிரியின் மேல்கரையில் சங்கமேசுவரர் கோயில் இருக்கிறது? கோயிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய பிரதான வாயில் வழியாகவே நாம் உள்ளே செல்லலாம். அவ்வாயிலைக் கடந்ததுமே முன் முற்றத்தில் சிறிய கோபுரத்துடன் கூடிய ஒரு தனிக்கோயிலில் விநாயகர் இருப்பார். அவரை வணங்கிவிட்டு மேலே நடக்கலாம்.