பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

291

கிழக்கு வாயிலுக்கு எதிரிலேதான் கொடிமரம். பலிபீடம் விளக்கேற்றும் கல் தூண் எல்லாம் இருக்கும். கோயிலுள் போவதன் முன் கிழக்கு வாயில் வழியாகக் கூடுதுறைக்குச் சென்று அங்கு முங்கி முழுகி நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாமே. அங்கெல்லாம் வசதியாக ஸ்நானம் செய்ய நல்ல படித்துறை கட்டி வைத்திருக்கிறார்கள். அதிலும் அமாவாசை கிரகண காலங்களில் அங்கு நீராடுவது சிறப்பு என்றும் தெரிகிறது.

காலில் அரவம் இரு கடரைப்
பற்றும் காலத்திலே,
மேலுலகம் பெறுவோர் புனல்
மூழ்க விரும்புவது
கோலம் மிகுந்த பவானியும்
பொன்னியும் கூடுதுறை
வாலிய காசி நண்ணாவூர்
பயில் கொங்கு மண்டலமே

என்பது தானே கொங்கு மண்டல சதகப் பாட்டு? இதைக் கேட்டவுடனே, இது என்ன இதை நண்ணாவூர் என்று வர்ணிக்கிறார்கள் என்றுகேட்கத் தோன்றும். ஆம்! பார்வதியம்மையின் திருப்பெயர்கள் பலவற்றுள் பவானி என்பது ஒன்று, அந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்திருக்கிறது. மேலும் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள முக்கூடலில் முழுகி எழுவோரை யாதொரு தீங்கும் நண்ணாது. ஆதலின் இதனை நண்ணாவூர் என்றும் அழைத்திருக்கின்றனர். இந்த நண்ணாவூரே, திரு நணா என்றும் குறுகி, ஞானசம்பந்தரால், ‘வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழியில் வண்டு பாடச் செந்தேன் தெளி ஒளிரத் தேமாங்கனி உதிர்க்கும் திருநணா' என்றும் பாடல் பெற்றிருக்கிறது. இன்னும் இந்தத் திரு நணா என்னும் பவானி, சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோடு), மங்கல