பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/306

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

வேங்கடம் முதல் குமரி வரை

கிரி, வேதகிரி, பத்மகிரி என்று ஐந்து சிறு மலைகளுக்கு இடையே இருப்பதால் பஞ்சகிரி மத்தியப் பிரதேசம் எனவும் வழங்குகிறது.

இந்தப் பவானி கூடுதுறையிலே காயத்திரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தக் கட்டம் இருக்கிறது. அதனைக் காயத்திரி மடு என்றும் கூறுகிறார்கள். இதன் கரையிலே காயத்திரி லிங்கமும் இருக்கிறது. அமுத லிங்கம் என்று ஒரு லிங்கத் திருவுருவம் வேறே இருக்கிறது. அன்று தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பங்கைப் பராசர முனிவர் மகா விஷ்ணுவிடம் பெற்றிருக்கிறார். இந்தப் பராசரர் கொண்டு வந்த அமுதத்தைத் தட்டிப் பறிக்க அசுரர்கள் அவரைத் தொடர்ந்திருக்கிறார்கள். அமுதம் அவர்கள் கண்ணில் படாமலிருக்க, அதனைப் பராசரர் இந்தக் கூடுதுறையிலே புதைத்து வைத்திருக்கிறார். ஆனால் அப்படிப் புதைக்கப்பட்ட பாண்டத்தோடு கூடிய அமுதமே அங்கு லிங்க உருவமாக மாறியிருக்கிறது. இந்த அமுதலிங்கத்தின் அடியில் இருந்துதான் அமுதவூற்று புறப்பட்டுக் காவிரியோடு கலக்கிறது என்கிறார்கள். இந்த அமுத லிங்கம், அதற்குரிய ஆவுடையாரின் பேரில் இருக்கிறது. எளிதாக எடுக்கவும், திரும்ப வைக்கவும் கூடிய நிலையில் இருக்கிறது. மகப்பேறு இல்லாதவர்கள் இந்த அமுத லிங்கத்தை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு அக்கோயிலை வலம் வந்தால் மகப்பேறு அடைவர் என்பது நம்பிக்கை.

கூடுதுறையில் இத்தனையும் பார்த்தபின் இனிக் கோயிலுள் நுழையலாம். இந்தக் கோயிலைச் சுற்றி ஒரு கோட்டை இருந்திருக்கிறது அந்த நாளில். அந்தக் கோட்டைச் சுவரின் சின்னங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பெரும் பகுதி இடிந்து தகர்ந்து விட்டது