பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

293

என்று தெரிகிறது. கோயில் பிரகாரத்தைச் சுற்றினால் அங்கு தல விருட்சமான இலந்தை மரத்தைப் பார்க்கலாம். அது காரணமாக இத்தலம் பதரி ஆசிரமம் என வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அறியலாம். கோயிலின் நிருத்த மண்டபம், மகா மண்டபம் எல்லாம் கடந்தே கருவறையில் உள்ள சங்கமேசுவரரைத் தரிசிக்க வேணும். இது எல்லாம் சில வருஷங்களுக்கு முன். இப்போது சுவாமி கோயில் பழுதுற்றிருந்ததை இடித்துவிட்டுக் கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பணி பூர்த்தியாக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். ஆதலால் சங்கமேசுவரர், அவருடன் இருந்த விநாயகர், தண்டபாணி, ராமநாதர், பர்வதவர்த்தினி, சண்டீசர், பைரவர், பஞ்ச லிங்கங்கள், நவக்கிரகங்கள் எல்லோருமே இடம் பெயர்ந்து திருமுறைக் கழகக் கட்டிடத்தில் இருக்கிறார்கள். அந்தப் பாலாலயம் (இளங்கோயில்), சென்றால் எல்லோரையும் ஒருமிக்க எளிதாகவே தரிசித்துவிடலாம்.

இப்போது திருப்பணி நடக்கும் கோயிலுக்கு வடபுறம் அம்மன் கோயில் இருக்கிறது; அம்மையின் பெயர் வேத நாயகி. அங்கும் நிருத்த மண்டபம், மகா மண்டபம் எல்லாம் இருக்கின்றன. இந்த நிருத்த மண்டபத்தைக் கட்டியவர்

வே.மு.கு.வ - 20