பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

வேங்கடம் முதல் குமரி வரை

மும்முடிக் கெட்டி முதலியின் சகோதரி சின்னம்மாள் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அந்தக் கல்வெட்டில் அம்மையின் பெயர் பண்ணார் மொழியாள் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்மை கோயிலுக்கும் சுவாமி கோயிலுக்கும் இடையேதான் சுப்பிரமணியருக்கு ஒரு சிறுகோயில் இருக்கிறது. அம்மையை வணங்கிய பின் ஆறுமுகனையும் சென்று வணங்கி வெளி வரலாம்.

பின்னர் வெளி முற்றத்துக்கு வந்தால், இன்னுமொரு பெரிய கோயில் இருப்பதைப் பார்ப்போம். அது என்ன கோயில் என்று விசாரித்தால் அதுதான் ஆதிகேசவப் பெருமாள் கோயில் என்பார்கள். இது சிறப்புத்தானே. சைவ வைஷ்ணவ வேற்றுமைகளைக் களைந்தெறியவே, பெரியதோர் ஈசுவரன் கோயிலிலேயே பெருமாளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆம்! அன்று தில்லைச் சிற்றம்பலவன் கோயிலிலே திருச்சித்ரகூடத்துப் பெருமாளையும் தரிசித்து வணங்கியிருக்கிறோமே. இக்கோயிலில் ரங்க மண்டபம் விஸ்தாரமான மண்டபம். ஆதிகேசவப் பெருமாளது துணைவி சௌந்தரவல்லிக்கு ஒரு தனிக்கோயில். ரங்க மண்டபத்தின் வடபக்கத்திலே, தனித் தனிக் கோயிலில் ருக்மிணி சத்யபாமை சகிதமாக வேணுகோபாலன் வேறே இருக்கிறார். திருமால் சந்நிதிக்கும் தாயார் சந்நிதிக்கும் இடையில் நம்மாழ்வார், ராமானுஜர் எல்லாம். இன்னும் கோயில் கல்தூண்களில் பட்டாபிராமர், கோதண்டராமர், திருப்பணி செய்த பக்தர்களின் சிலைகள்.

இவர்களையெல்லாம் தரிசித்த பின் வெளியே வருவோம் என்றால், உடன் வருபவர்கள் கிழக்கு மதில் சுவர்ப்பக்கம் நம்மை அழைத்துச் செல்வார்கள். அம் மதில் சுவரில் அம்மை சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மூன்று சிறு துவாரங்களைக் காட்டுவார்கள். அந்தத் துவாரங்கள் எப்படி ஏற்பட்டன என்பதற்கு ஒரு ரசமான கதையையும்