பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

295

கூறுவார்கள். கும்பினியார் இந்தியாவை ஆண்டபொழுது இந்தப் பவானிதான் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்திருக்கிறது. 1802-ம் வருஷத்தில் இங்கு கலெக்டராக இருந்தவர் வில்லியம் காரோ என்றும் துரைமகனார். அவர் பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் இங்கு இருந்திருக்கிறார். அவர், இப்போது பிரயாணிகள் விடுதியாக இருக்கும் பங்களாவிலே தங்கி வாழ்ந்திருக்கிறார். தினசரி இந்த சங்கமேசுவரர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவதையும் கூடுதுறையில் குளிப்பதையும் கண்டிருக்கிறார். அதோடு வருபவர்கள் வேதநாயகியின் அருளைப்பற்றி அடிக்கடி பேசுவதையும் கேட்டிருக்கிறார். அவருக்கு ஓர் ஆசை இந்த வேதநாயகியைத் தரிசிக்க வேண்டும் என்று. இவரோ பிற மதத்தினர். கோயிலுள் வர அனுமதிக்கப்பட்ட மாட்டார். இவரது ஆவலை அறிந்த அந்தத் தாலுகா தாசில்தார் அம்பிகையின் சந்நிதிக்கு நேரே மதிலில் மூன்று சிறு துவாரங்கள் செய்து அவை வழியாக அலங்கரிக்கப்பட்ட அம்பிகையைக் கலெக்டர் காண வகை செய்திருக்கிறார். அம்பிகையின் வடிவழகைக் கண்டு வழிபாடு செய்திருக்கிறார் கலெக்டர். இப்படியே தினசரி சிறு துளை வழியாக அம்மையைக் கண்டு தரிசித்து வந்திருக்கிறார் காரோ துரை. ஒரு நாள் இரவு, தம் பங்களாவில் உறங்கிக் கொண்டிருந்த போது வேதநாயகியைப் போல் அலங்காரம் செய்துகொண்ட பெண் ஒருத்தி தம்மை வெளியே போகும்படி சொன்னதாகக் கனவு கண்டிருக்கிறார். அப்படியே படுக்கையை விட்டு