பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

வேங்கடம் முதல் குமரி வரை

எழுந்து வெளியேயும் வந்திருக்கிறார். என்ன அதிசயம்! இவர் வெளி வந்த சில நிமிஷங்களில், பங்களாக் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது. அன்னையின் அருளை வியந்து வாழ்த்திய கலெக்டர், தந்தத்தாலேயே ஒரு கட்டில் செய்து அதனை அம்பிகைக்குத் தம் காணிக்கையாக வழங்கியிருக்கிறார். கட்டிலில் தம் பெயரையும் பொறித்து வைத்திருக்கிறார். இக்கட்டில் காணிக்கையாக கொடுக்கப் பட்ட தேதி 11-7-1804 என்று கட்டிலில் இருந்து தெரிகிறது. 'தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்' என்றார் மாணிக்கவாசகர். அப்பாலும் அடிசார்ந்த திருக் கூட்டமும் அடியார் கூட்டத்துடன், சேர்ந்தவர்களே. இந்த முறைப்படி, பிற மதத்தினரையும் தம் அடியவர்களாகச் சேர்த்துக் கொள்ளும் சங்கமேசுவரர் வேதநாயகியின் பெருமைதான் என்னே? பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த இந்தச் சம்பவத்தை முன்னரே அறிவிப்பார் போல் ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்பே ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார் :

வில்லார் வரையாக, மாநாகம்
நாணாக, வேடங் கொண்டு
புல்லார் புரம் மூன்றும் எரித்தார்க்கு
இடம்போலும் புலியும்மானும்
அல்லாத சாதிகளும் அங்கு அழல்
மேல் கைகூப்ப அடியார்கூடி
செல்லா அரு நெறிக்கே செல்ல
அருள் புரியும் திருநணாவே.

என்பது அவரது தேவாரம், 'அல்லாத சாதிகள்' ஜாபிதாவில் காரோ துரையும் சேர்ந்தவர்தானே. இங்குள்ள சங்கமேசுவரர் - வேதநாயகி தாம் பாடல் பெற்றயர்கள் என்று இல்லை. இங்குள்ள முருகனும் அருணகிரியாரால் பாடப் பெற்றவர்.