பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

வேங்கடம் முதல் குமரி வரை

அடிபணியாமல் இருப்பானா? முதலை குளத்தில் நீத்திக்கொண்டு வருகிறது. ஐந்து வருஷங்களுக்கு முன்னர் தான் உண்டு ஜீரணித்த பையனை அப்படியே உமிழ்கிறது. அதிலும் அதிசயம் என்னவென்றால் ஐந்து வருஷங்களுக்கு முன் ஐந்து வயதுப் பாலகனாக உண்ட பையனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உமிழ்கிறது. பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஒரே மகிழ்ச்சி. பையனை ஐந்தாண்டு வளர்க்க வேண்டிய சிரமம்கூட இல்லாமல் அல்லவா முதலை தன் வயிற்றிலேயே வளர்த்திருக்கிறது? இனி இரண்டு பையன்களுக்கும்குறிப்பிட்ட நல்ல முகூர்த்தத்திலேயே உபநயனம் நடக்கிறது. இப்படி ஓர் அதிசயம் நடந்திருக்கிறது புக்கொளியூர் என்னும் அவிநாசியில். அந்த அவிநாசியில் இருப்பவர் தான் அவிநாசி அப்பர். அந்த அவிநாசி அப்பரைக் கண்டு வணங்கவே செல்கிறோம் நாம் இன்று.

அவிநாசி, கோவை மாவட்டத்திலே அவிநாசித் தாலூகாவின் தலைநகரம். நகரம் என்று சொல்ல லாயக்கற்ற சிறிய ஊர்தான். கோயம்புத்தூரிலிருந்து வட கிழக்காய் இருபத்தைந்து மைல் பஸ்ஸிலோ காரிலோ சென்றால் இவ்வூர் வந்து சேரலாம். இவ்வூருக்கு நேரடி ரயில் பாதை கிடையாது என்றாலும் கோவை ஈரோடு ரயில் பாதையில் திருப்பூர் ஸ்டேஷனில் இறங்கி வட மேற்காய் எட்டு மைல் பஸ்ஸிலோ வண்டியிலோ போனாலும் வந்து சேரலாம். இந்தப் பாதையில் போவதில் ஒரு சௌகரியம். வழியில் மூன்றாவது மைலில் திரு முருகன் பூண்டி என்ற பாடல் பெற்றதலம் இருக்கிறது. முருகன் தன் தந்தையான சிவபெருமானை வழிபட்ட தலம். இங்குள்ள கோயில் சிறிய கோயில் தான். கோயில் வாயிலில் கோபுரம் இராது, சந்நிதி மேற்கு நோக்கியது; அங்கு கோயில் கொண்டிருப்பவர் முருகநாதர். அம்மை முயங்கு பூண் முலையாள். சுவாமி சந்நிதிக்குவலப்புறம் முருகனுக்குத் தனி சந்நிதி. இந்த முருகன் சிறந்த வரப்பிரசாதி. பைத்தியநோய் தீர்க்கும் சிறந்த