பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

301

வைத்தியனாகவே இன்றும் விளங்குகிறான். இக்கோயில் சுந்தரரோடு வரலாற்றுத் தொடர்புடையது. அவரது நண்பர் சேரமான் பெருமாள் கொடுத்த பொருளை எடுத்துக் கொண்டு இந்த வழியில் வந்திருக்கிறார் சுந்தரர். சிவபிரான் ஒரு வேடிக்கை செய்ய விரும்பியிருக்கிறார். தம் பூத கணங்களை வேடர்களாக்கி, சுந்தரர் கொண்டு வந்த பொருளைப் பறிக்கச் சொல்கிறார். பொருளைப் பறிகொடுத்த சுந்தரருக்கு ஒரே கோபம். அந்தச் சமயத்தில் பக்கத்திலிருந்த பிள்ளையார், சுந்தரரைக் கூப்பிட்டு, கொள்ளையடித்தவர் இருக்கும் இடத்தைச் சொல்கிறார். இந்தப் பிள்ளையார் இன்றும் ஊர்ப் பக்கத்திலுள்ள குன்றின்மேல் கூப்பிடு விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார், சுந்தரர் மிகுந்த கோபத்துடனேயே கோயில் வாயில் வந்து, 'எல்லை காப்பது ஒன்று இல்லையாகில், எத்துக்கு இருந்தீர் எம்பிரான் நீரே?' என்றே திட்டுகிறார். இவர் திட்டையெல்லாம் புகழ்மாலையாக ஏற்றுக் கொண்டு திருடிய பொருள்களையெல்லாம் திரும்பக் கொடுத்துச் சுந்தரரை வழியனுப்பியிருக்கிறார் முருகநாதர். இந்தக் கோயிலில் ஒரு சிறிய குடவரை, அங்கு வேட்டுவ உருவத்தில் வந்த இறைவன், பொருள் பறிகொடுத்த சுந்தரர் எல்லாருமே செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து மைல் நோக்கி நடந்துதான் அவிநாசியப்பர் கோயிலுக்கு வரவேணும். கோவை பவானிப் பெருஞ்சாலையில் வந்தால் தேர்முட்டி தெரியும். அதன் பக்கத்தில் ஒரு வாயிலும் தெரியும். ஆனால் அது கோயில் அல்ல. அந்த இடத்திலிருந்து கொஞ்சம் சுற்றி வளைத்துக்கொண்டு தெற்கே வந்தால்தான் கோயில் வாயில் வந்து சேரலாம். கோயில் கிழக்கு நோக்கியிருக்கும். கோயில் வாயிலில் கோபுரம் முழுதும் கட்டப்படாமல் அடித்தளத்துடனேயே இருக்கும். கோயிலைச் சுற்றி வீதிகள் இல்லை. கோயிலுள் இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோயில்