பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

303

மண்டபத்துக்குள் ஒரு மேடை. மண்டபத்தில் ஏறினாலும் இந்த மேடைமீது ஏற முடியாது. அங்கு தான் கோயிலின் செப்புச் சிலைகளையெல்லாம் வைத்து நல்ல இரும்புக் கிராதி போட்ட கதவுகளால் பூட்டி வைத்திருக்கிறார்களே. கொஞ்ச நேரம் காத்திருந்தாவது நிர்வாகிகளைத் திறவு கோல் கொண்டு வரச் செய்து அங்குள்ள செப்பு வடிவங்களையெல்லாம் பார்த்து விடவேண்டியதுதான். அங்கு, வழக்கமாக உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் இவர்களுடன் பிக்ஷாடனர், பைரவர், வில்லேந்திய வேலன், இரண்டு அம்பிகைகள் எல்லாம் இருப்பர். அத்துடன் அறுபத்து மூவரும், நல்ல பெரிய செப்புப் படிமங்களாக நிற்பர். இவர்களோடு முதலை வாயிலிருந்து பிள்ளையை அழைத்த சுந்தரருமே நிற்கிறார். சுந்தரரை வடித்தவன் முதலையை வடிக்க மறந்திருக்கிறான், ஆனால் சமீபகாலத்தில் ஒரு முதலையையும் செய்து வைத்திருக்கிறார்கள்; அந்த முதலை உடல் பருத்துக் கட்டு குட்டென்று இருக்கும். ஆம், ஐந்து வயதுப் பையனைப் பத்து வயது வரை வயிற்றுக்குள்ளேயே வைத்து வளர்க்கும் பொறுப்பு அல்லவா இருந்திருக்கிறது அந்த முதலைக்கு? இவற்றை யெல்லாம் பார்த்துவிட்டே அன்னை கருணாம்பிகை சந்நிதிக்கு நடக்க வேணும்.

வழக்கமாக இறைவனுக்கு இடப்பக்கத்தில் இருக்கும் அன்னை. இங்கு வலப் பக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறாள். இதற்கு ஒரு கதை. காசியில் இறைவனுக்கும் இறைவிக்குமே ஒரு பிணக்கு. இருவரும் அதனால் ஒருவரை விட்டு ஒருவர் விலகி வாழ்கிறார்கள். ‘டைவொர்ஸ்' ஒன்றும் செய்துகொண்டதாகத் தெரியவில்லை. அம்மை திரும்பவும் இறைவனை அடையத் தவம்புரிகிறாள். தவத்துக்கு இரங்கி காசி விசுவநாதர், அவிநாசிக்கு எழுந்தருளி அம்மையை ஏற்றுக் கொள்கிறார். 'கட்டிலின் தலை திருப்பி வைத்தால்