பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

309

மிக்க மதுரைச் சிவனும்
வீரபத்திரன் சுதனும்
சொக்கர் இருவர் எனத்
தோன்றினார் - அக்கோன்
பிறவாமல் காப்பான்
பிறந்தாரை மண்மேல்
இறவாமல் காப்பான் இவன்.

என்பதுதான் பாட்டு. கவிஞரது பாராட்டுத்தான் எவ்வளவு நயமாக அமைந்து விடுகிறது? மதுரையில் கோயிலுள் இருக்கிறான் ஒரு சொக்கலிங்கம் ; அவனது திருவடிகளில் சென்று சேர்ந்தால், அப்படிச் சேரும் உயிர்களைப் பிறவியாகிய நோயிலிருந்து காக்க அவனுக்குத் தெரியும். அவ்வளவு தானே? அப்படி அவன் காக்கத் தவறிய உயிர்கள் மீண்டும் பிறந்து விட்டால் அந்த உயிர்களை இறவாமல் காக்க அல்லவா தெரிந்து வைத்திருக்கிறான், இந்த வீரபத்திரனின் பிள்ளை வைத்தியன் சொக்கலிங்கம். தன் உயிர் காத்ததற்கு நன்றியை இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியுமா என்ன? பிறவாமல் காக்கும் ஓர் இறைவனையும் இறவாமல் காக்கும் ஒரு வைத்தியனையும் அறிமுகம் செய்து கொள்கிறோம் இந்தப் பாட்டின் மூலம். ஆனால், பிறவாமை இறவாமை இரண்டையுமே செய்து கொண்டிருக்கிறாரே ஓர் இறைவன் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதுவும் பிறவாமையை ஒரு புளிய மரம் மூலமாகவும் இறவாமையை ஒரு பனை மரம் மூலமாகவும் காட்டிக் கொண்டிருக்கும் அதிசயம் என்னவென்று அறிய வேண்டாமா? அதைத் தெரிந்து கொள்ளப் பேரூருக்குச் செல்ல வேண்டும்.

பேரூர்ப் பட்டீசர் கோயில் வாயிலேயே ஒரு புளிய மரம். நல்ல மேடை யிட்டுக் கட்டி மரத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதுதான் பிறவாப் புளி. அது என்னவென்றால் அந்த மரத்தின் கொட்டைகளை முளைக்கப்