பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

வேங்கடம் முதல் குமரி வரை

போட்டால் முளைக்கிறதே இல்லையாம். அந்தப் புளிய மரத்துக்கு இனிப் பிறவியே கிடையாது என்பது இறைவன் ஆக்ஞை போலும். அதனால் அது பிறவாப் புளியாகவே நின்று கொண்டிருக்கிறது. இனிக் கோயிலுக்கு வடக்கே ஆற்றங்கரையில் உள்ள வட கயிலாயம் என்னும் சிற்றாலயத்துக்கு வந்தால் வெளி முற்றத்தில் ஒரு பனை மரம் நிற்கிறது. அதற்கு இறவாப் பனை என்று பெயர். இந்தப் பனையின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால் தீராத வியாதி எல்லாம் தீருகிறது. இப்படி மக்களை அவர்களுக்கு வரும் நோயினின்றும் காப்பாற்றி இறவாது காக்கும் பெருமை உடையது. இந்த இறவாப் பனை, அந்த பிறவாப் புளி இருக்கும் கோயிலே பேரூர்ப் பட்டீசர் கோயில். அந்தப் பேரூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

பேரூர், கோயம்புத்தூருக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் இருக்கிறது. கோவை செல்பவர்கள் ரயிலிலோ, காரிலோ மூன்று மைல் சென்று பேரூரைச் சேரலாம். போகிற வழியில் நொய்யல் என்று வழங்கும் காஞ்சிமா நதியைக் கடக்க வேணும். அந்த நதிக்கரையிலே பிதுருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது என்று கூறுவர். நொய்யல் நதியைக் கடந்ததும் சாந்தலிங்க சுவாமிகள் திருமடமும் அம்மடத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்லூரியும் வரும். அவகாசம் இருந்தால் அவற்றையும் சென்று காணலாம். இல்லாவிட்டால் நேரே கோயில் வாயிலுக்கே போகலாம். கோயில் வாயிலில் தென்பக்கமாக ஒரு கல்கட்டு மேடையில், முன்னரே குறித்த பிறவாப் புளி இருக்கிறது. அதைச் சுற்றிக் கொண்டு வந்தால் கோயில் வாயில் வந்து சேருவோம். வாயிலை ஓர் ஐந்து நிலைக் கோபுரம் அழகு செய்கிறது. கோயிலுக்கு முன்னால் நல்ல படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு பெரிய தெப்பக்குளம் வேறே இருக்கிறது.

ஊரைப் பார்த்தால் பேரூர் என்று சொல்வதற்கே லாயக்கற்றது என்றுதான் தோன்றும். என்றாலும்முத்தி