பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

313

அலறுவதற்குக் காரணம் கேட்டபோது அவன் சொல்லியிருக்கிறான் : எல்லாம் சரிதான். 'இந்தக் கல்லினுள் தேரையிருக்கிறதே. இது தெரியாமல் இக்கல்லைத் தேர்ந்தெடுத்துச் சிற்பம் அமைத்திருக்கிறானே சிற்பி' என்கிறான், சிற்பி கம்மனாச்சாரி இதனைக் கேட்டுக் கோபமுற்று, அவ்விளைஞனது கூற்றை மெய்ப்பிக்கச் சொல்லியிருக்கிறான். இளைஞனும் சளைக்காமல் கொஞ்சம் சந்தனம் கொண்டு வரச் சொல்லி, அந்தச் சந்தனத்தை அத்தூணில் உள்ள குதிரைமேலும் குதிரை வீரன் மேலும் பூசியிருக்கிறான். சிறிது நேரத்தில் சிற்பம் மீது பூசிய சந்தனம் உலர்ந்திருக்கிறது. உள்ளங்கை அகலம் உள்ள ஓர் இடம் மட்டும் உலராமலேயே நின்றிருக்கிறது. இளைஞன் சிற்பியிடம் இருந்த சுத்தியல் ஒன்றை வாங்கி அந்த இடத்தைத் தட்டியிருக்கிறான். குதிரை, குதிரை வீரன் எல்லாம் தவிடு பொடி ஆகியிருக்கின்றன. தேரை ஒன்றும் அக்கல்லினுள் இருந்து வெளியே குதித்திருக்கிறது. சிற்பி கம்மனாச்சாரி தலை கவிழ்ந்திருக்கிறான். பின்னர் இளைஞனது குலம், கோத்திரத்தை விசாரித்தால் அவன் கம்மனாச்சாரியின் புதல்வனே, என்றும் சிறு வயதில் வீட்டைவிட்டு ஓடியவனே திரும்ப வந்திருக்கிறான் என்றும் அறிகிறார்கள். முடிவில் சிற்பி மகன் சிற்பியே என்ற புகழையே அல்லவா நிலை நிறுத்திவிடுகிறான் இளைஞனான சிற்பி?

கோயிலுள் கருவறையில் இருப்பவர்தான் பட்டீசர், கோட்டீசர் என்றுபெயர் பெற்றவர். இவர் சுயம்பு மூர்த்தி. இவர் தலையிலே கன்றுக்குட்டிக் குளம்பின் சுவடும் பசுவின் கொம்புச் சுவடும் இருக்கின்றன. அபிஷேக காலத்தில் கூர்ந்து கவனித்தால் இச்சுவடுகளைக் காணலாம். இந்தச் சுவடுகள் - தழும்புகள் ஏற்படக் காரணம் என்னவென்று கேட்டால் அதற்குக் கிடைக்கும் விடையிலேயே அவரது பெயர்க் காரணமும் தெரியும். ஆதியில் இந்தப் பக்கம் முழுதும் ஒரே அரசமரங்கள் நிறைந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்