பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

315

கோயிலுக்கும் இடையேதான் கல்யாண மண்டபம். அங்குதான் செப்புச் சிலைகள் எல்லாம் சேர்த்துப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

இக்கோயில் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற கோயில் அல்ல. என்றாலும் சுந்தரரோடு வரலாற்றுத் தொடர்புடையது. சுந்தரருக்காகப் பட்டீசர் ஒரு திருவிளையாடலையே நிகழ்த்தியிருக்கிறார் இங்கே. இந்த சுந்தரர்தான் தம்பிரான் தோழர் ஆயிற்றே. அவருக்கோ எப்போதும் பணமுடை; எந்தத் தலத்துக்குச் சென்றாலும் அங்குள்ள இறைவனிடம் பணம் வேண்டிக் கையை நீட்டிவிடுவார். பேரூர் பக்கம் இவர் வருகிறார் என்ற உடனே பட்டீசருக்குக்கவலை. அவருடைய கஜானாவிலோ பணம் இல்லை. சுந்தரரோ கேட்காமல் இருக்கமாட்டார். கேட்டதைக் கொடுக்காமல் இருப்பதோ அழகில்லை. ஆதலால் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்ள, பட்டீசர் தன் துணைவி பச்சை நாயகியோடு பள்ளன் வடிவில் வயல் காட்டுக்குப் போய் நாற்று நடுவது போல் பாவனை - செய்கிறார்.

தலத்துக்கு வந்த சுந்தரர் விஷயமறிகிறார். அவரா விடுவார் இறைவனை? வயல் வெளிக்குச் சென்று, பட்டீசரைக் கண்டு பிடித்து இழுத்து வந்த விடுகிறார் கோயிலுக்கு. பின்னர் அவர் விரும்பியபடியே இறைவன் தன் ஆனந்தக் கூத்தையும் அம்பலத்தில் நடித்துக் காட்டுகின்றார். சுந்தரர் பேரூர் இறைவனைப் பாடியிருக்க வேண்டும். அப்பாடல்கள் கிடைக்கவில்லை. ஆனால் பேரூர்ப் பெருமானை நினைத்துத் தில்லைச் சிற்றம்பலத்திலே பாடிய அவரது பாடல் கிடைக்கிறது நமக்கு.

பாரூரும் அரவு அல்குல்
உமை நங்கை அவள் பங்கன் -
பைங்கண் ஏற்றன்