பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வேங்கடம் முதல் குமரி வரை

யொட்டிய பட்டீச்சுரம், பழையாறை முதலிய ஊர்களுக்கே செல்கிறோம் நாம்.

சக்திமுற்றமும் பட்டீச்சுரமும் அடுத்தடுத்து இருக்கிற ஊர்கள், சக்திமுற்றத்தில் சிவக்கொழுந் தீசரும் பட்டீச்சுரத்தில் தேனு புரீசுவரரும் கோயில் கொண்டிருக்கிறார்கள், இந்தத் தலங்களை அடுத்தே சரித்திரப் பெருமையுடைய பழையாறை இருக்கிறது. இன்று இந்த வட்டாரத்தையே ஒரு சுற்றுச் சுற்றி விடலாம். பட்டீச்சுரம், சக்திமுற்றம் முதலிய தலங்களை உள்ளடக்கிய பெரும் பகுதியே பழையாறை என்ற பெயரில் விளங்கியிருக்கிறது அன்று. சோழ மன்னர்களின் சிறந்த தலை நகரங்கள், காவிரிப்பூம்பட்டினம், உறையூர், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் என்பதை அறிவோம். அவற்றை ஒத்த பெருமை உடையது பழையாறை, ராஜராஜனுக்கு முந்திய சோழர்கள் இருந்து ஆட்சி செலுத்திய இடம். ராஜராஜனே இங்கே இருந்துதான் வளர்ந்திருக்கிறான். காவிரியின் கிளை நதியான முடிகொண்டான், அரசிலாறு இவற்றுக்கிடையே ஐந்து மைல் நீளமும் மூன்று மைல் அகலமும் உள்ள பிரதேசமே பழையாறைப் பகுதி. இங்கே சோழ மன்னரது மாளிகைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பகுதியே சோழ மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இன்னும் சோழர் படை எல்லாம் திரட்டி இங்கேயே நான்கு பிரிவாக வைத்திருக்கிறார்கள். அப் படைகள் இருந்த இடங்களே ஆரியப் படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர் என்று இன்றும் வழங்கி வருகின்றன.

பழையாறைப் பகுதி நான்கு சிறு பிரிவுகளுக்கு உட்பட்டிருக்கிறது; பழையாறை வடதளி, மேற்றளி,கீழ்த்தளி, தென் தளி என்று. தளி என்றால் கோயில் என்று பொருள். தாராசுரத்திலிருந்து தெற்கே மூன்று மைல் தொலைவில் இருக்கிறது வடதளி. ரோடு வளைந்து வளைந்து செல்லும்.