பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

49

வாரி உண்டு சுவைத்தவன் இன்று குசேலர் கொண்டு வந்த அவலையும் அள்ளி அள்ளித் தின்றான். அன்றே குசேலர் வறுமை நீங்குகிறது என்பது கதை. பக்தர் கொண்டு வரும் பொருள் அருமையானதாக இருக்க வேண்டும் என்பதில்லை கண்ணனுக்கு. பக்தி பூர்வமாக அர்ப்பணிக்க வேண்டுவது தான் முக்கியம். இல்லாவிட்டால் சர்க்கரையோ தேங்காய்த் துருவலோ கலவாத சாதாரண அவலைச் சுவையுடையது என்று விருப்போடு உண்டிருப்பானா? அவலாவது போகட்டும். ஏதோ கொஞ்சம் சுவையுடையதாக இருக்கும். உப்பே இல்லாத பண்டம் சுவையாக இருக்குமா? அப்படி உப்பில்லாத உணவையே ஏற்று அதை உண்டு மகிழ்ந்ததோடு, பின்னரும் தனக்குச் சமைக்கும்போது உப்பில்லாமலே சமைக்கட்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறானே, இது மாத்திரமா? இது காரணமாக உப்பிலியப்பனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறானே அவன். ஆம்! அந்த உப்பிலியப்பன் கோயில் கொண்டிருக்கும் திருவிண்ணகர் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

உப்பிலியப்பன் கோயிலுக்குக் கும்பகோணத்திலிருந்தே பஸ் போகிறது. அல்லது திருநாகேசுவரம் ஸ்டேஷனிலும் இறங்கலாம். இரயில்வே நிர்வாகிகளே உப்பிலியப்பன் கோயிலுக்கு இங்கே இறங்கவும் என்று பலகையில் எழுதி விளம்பரப்படுத்தி யிருக்கிறார்கள். வண்டிகள் எல்லாம் சௌகரியமாகக் கிடைக்கும். அங்கிருந்து கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உப்பிலி அப்பன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் செல்லும் வழியிலே திருநாகேசுரத்துக் கோயில் வேறே இருக்கிறது. சந்திரன், சூரியன், ஐந்து தலை நாகம் எல்லாம் பூஜித்த தலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர் எல்லாம் வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள்,

சந்திரனோடு சூரியர் தாம் உடன்
வந்துசீர் வழிபாடுகள் செய்தபின்