பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

51

உப்பிலியப்பன் என்று பெயர் பெற்றார் என்று சொல்ல வில்லையே இன்னும்?' என்று நீங்கள் ஆதங்கப்படுவதை அறிவேன். இங்கு இத்தலத்தில்தான் மார்க்கண்டேயர் அமரத்துவம் பெற்றபின் வந்த தங்கியிருக்கிறார். பூதேவியையே தம் மகளாகப் பெறத் தவஞ் செய்திருக்கிறார். அவர் விரும்பியபடியே அந்தத் துளசி வனத்தில் ஒரு துளசிச் செடியின் அருகில் வந்து பெண் மகவாகப் பிறந்திருக்கிறார் பூதேவி. குழந்தையை எடுத்து வளர்க்கிறார்; பெண் மணப்பருவம் எய்துகிறாள். எம்பெருமான் கிழ வேதிய வடிவில் வந்த மார்க்கண்டேயரிடம் அவர் மகளாம் பூதேவியை தமக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டுகிறார். வந்திருக்கும் முதியவரின் கோலம் கண்டு, இல்லை என்று சொல்லாமல், ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கலாமா என்று பார்க்கிறார் மார்க்கண்டேயர்.

'என் பெண் மிகமிக இளம் பெண் ஆயிற்றே. சரியாய்ச் சமைக்கத் தெரியாதே, உணவின் சுவையைக் கூட அறியாளே, நிரம்பச் சொல்வானேன். கறிகளில் உப்புச் சேர்க்கக்கூட அவளுக்குத் தெரியாதே' என்று கூறுகிறார். பெருமாளோ விடுகிறவராகக் காணோம். 'அது தெரியாதா! எனக்கு உணவில் உப்பே சேர்க்க வேண்டியதில்லையே, உப்பில்லாப் பத்தியச் சாப்பாடே சாப்பிட நான் தயார்' என்கிறார். அப்படியும் அவளை மணம் முடித்துத் தர இசையாவிட்டால் தம் உயிரையே விட்டு விடுவேன் என்கிறார்.

பின்னர் தம் நிஜ உருவையுமே காட்டுகிறார். ஆழியும் சங்கும் ஏந்தி நிற்கும் பரந்தாமனைக் கண்டு தொழுது தன் பெண்ணாம் பூமி தேவியை மணம் முடித்துக் கொடுக்கிறார் மார்க்கண்டேயர். பெருமாளும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அன்று முதல் தமக்குச் செய்யும் நைவேத்தியங்களில் உப்பே சேர்க்க வேண்டாம் என்று உத்தரவிட்டு விடுகிறார். (அதனால் பரவாயில்லை. உப்பில்லாத வெண்