பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வேங்கடம் முதல் குமரி வரை

கொண்டு திருவேங்கடமுடையானும் இங்கு எழுந்தருளியிருக்கிறான். இவர்களை அடுத்தே சீதா லக்ஷ்மண சமேதனான ராமன், சேனை முதலியார், ஆழ்வார்கள் எல்லாம். எல்லோரும் நல்ல செப்புச் சிலை வடிவில் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் ராமரும் சேனை முதலியாரும் அழகாயிருக்கிறார்கள். அடுத்த உள் கட்டிலே நுழைந்தால் நரசிம்மர், மணவாள மாமுனிகளை எல்லாம் தரிசிக்கலாம். இவர்களை எல்லாம் கடந்தே கருவறை சென்று சேரவேண்டும். அங்கு சாரநாதப்பெருமாள் சிலை உருவில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பார்.

அவருக்கு வலப்பக்கத்தில் மார்க்கண்டேயரும், இடப் பக்கத்தில் காவேரித் தாயாரும் சிலை வடிவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னாலே தான் உத்சவ மூர்த்தியான சாரநாதர். இவர் நறையூர் நம்பியைப் போலவும் விண்ணகர் ஒப்பிலியப்பனைப் போலவும் ஏக்பத்னி விரதர் அல்ல. ஸ்ரீதேவி, பூதேவி, காணும் காணாததற்கு நீளாதேவி சமேதராகவே நிற்கிறார். காவிரியின் மடியில் தவழ்ந்த மாமதலைக் கோலத்திலும் இருக்கிறார். இன்னம் சந்தான கிருஷ்ணன், செல்வர் எல்லாம் அங்கே இருப்பர். இவர்களையெல்லாம் தரிசித்த பின்பே வெளியே வந்து வலப்புறம் சுற்றினால் சாரநாயகித் தாயாரைத் தரிசித்து வணங்கலாம். ஒப்பிலியப்பன் கோயிலிலும், நாச்சியார் கோயிலிலும் தனிச் சந்நிதி கேட்காத் பிராட்டி, இங்கு மட்டும் தனிக் குடித்தனத்தையே விரும்பியிருக்கிறாள். காரணம் தான் தெரியுமே. ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு மூன்று 'துணைவியரை அல்லவா சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார் கருவறையிலே சாரநாதர். சாரநாயகி தனிக் குடித்தனம் போடாமல் இருப்பாளா?

இத்தலத்துக்குத் திருமங்கை ஆழ்வார் வந்திருக்கிறார். சாரநாதன் சாரநாயகியைத் தொழுதிருக்கிறார். பத்துப் பாசுரங்கள் பாடியிருக்கிறார்.