பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அடியவர் வேடத்தில் வருகிறார். வீட்டிலோ பிடி அரிசி இல்லை அதற்காக மாறர் சோர்ந்து விடவில்லை. அன்று விதைத்த நெல்லை வயலிலிருந்து சேகரித்து வந்து கொடுக்கிறார். அதனை வறுத்து, உலர்த்தி, அரிசியாக்கிக் சமைக்கிறாள் அவர் மனைவியார், விறகு இல்லையென்பதால் கூரையையே பிய்த்து எடுத்துத் தீ மூட்டுகிறார். தம்பதியர் இருவரது இந்த விருந்தோம்பல் பணியை! உலகுக்கு அறிவித்து அவர்களை ஆட்கொள்கிறார் இறைவன், தமிழ் மக்கள் எல்லாம் பின்பற்றி நடக்க வேண்டிய வாழ்க்கை வரலாறாயிற்றே இவரது வாழ்க்கை. அந்த மாறரையும் மனைவியையும் கண்டு தரிசிக்காமல் இருக்கலாமா என்றுதான் இத்தனை தூரம் உங்களைக் கொஞ்சம் இழுத்து அடித்துவிட்டேன்.

இப்படி வந்த இடத்திலே ஒரு பழய பெருமாள் கோயிலையும் பார்த்து விடலாம். அங்கே வேணுகோபாலர் கோயில் கொண்டிருக்கிறார். இந்தப் பெருமான் பெயர் மிகமிக நீளம். ருக்மனி சத்யபாமா சமேதராக நின்று குழலூதும் வின்னசாத்து எம்பெருமான் என்பர். திருக்கை அமர்த்தும் திருநாராயணன், நெடியகரிய மாணிக்க மரகத மதன வேணுகோபாலப் பெருமாள் என்று சொல்லிவிட்டாலே பெருமாளின் திருவடிவம் முழுதும் நம் கண்முன் வருமே. இளையான்குடி மாறரைக் காணவந்த இடத்தில் பெருமாள் தரிசனமும் கிடைக்கிறதென்றால் அதை விட்டு வைப்பானேன்.