பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. திருவாதவூர் அண்ணல்

சிலர் பெரிய மனிதர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் முயற்சியால் பெரிய மனிதர்களாகிறார்கள். சிலர் பெரிய மனிதர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பது ஆங்கிலப் புலவர் ஒருவரது விமரிசனம். இது மனிதர்களுக்கு மட்டும் இருக்கும் சிறப்பு அல்ல. கிராமங்கள், நகரங்களுக்குமே இச்சிறப்பு உண்டு. அரியக்குடி, செம்மங்குடி, முசிரி முதலிய கிராமங்கள், சரித்திரப் பிரசித்தியோ அல்லது புராணப் பிரசித்தியோ உடையவை அல்ல. என்றாலும் இம்மூன்று ஊர்களையும் இன்று இசை உலகில் அறியாதவர் இல்லை. காரணம், அரியக்குடியில் ஒரு ராமானுஜ அய்யங்கார், செம்மங்குடியில் ஒரு ஸ்ரீனிவாச அய்யர், முசிரியில் ஒரு சுப்பிரமணிய அய்யர் தோன்றியிருக்கிறார்கள். நல்ல சங்கீத விற்பன்னர்களாக வாழ்கிறார்கள். அது காரணமாக அரியக்குடி, செம்மங்குடி, முசிரி முதலிய கிராமங்களும் பிரசித்தி அடைந்து விடுகின்றன.

அதுபோலவே மதுரை ஜில்லாவில் ஒரு சிறிய ஊர். அந்த ஊர் அவ்வளவு பிரபலமான ஊர் அல்ல, அங்கு அமாத்தியர் குலத்திலே ஒருவர் பிறக்கிறார். வளர்கிறார். அவருடைய அறிவுடைமையைக் கேட்டுப் பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் தன் மந்திரியாகவே ஆக்கிக்கொள்கிறான். இந்த அமைச்சரை இறைவன் ஆட்கொள்கிறான். அவர் திருவாசகம் என்னும் தெய்வப்பாக்களைப் பாடுகிறார். அதனால் இறைவனாலேயே மாணிக்க வாசகர் என்று அழைக்கப்படுகிறார். அந்த மாணிக்க வாசகரது பிறப்பால் வாதவூர் பெருமை அடைகிறது. மாணிக்கவாசகரது பிள்ளைத் திருநாமம் என்ன என்று தெரியவில்லை. அவரை வாதவூரர் என்றே அழைக்கிறார்கள். வாதவூர் அண்ணல், வாதவூர்த்தேவன் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இப்படி மாணிக்கவாசகராம்