பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொன்டைமான்

111

பணம் திரட்டி அங்கு மணி வாசகருக்கு ஒரு கோயில் எழுப்பியிருக்கிறார்கள்.

வாதவூரராம் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பற்றி எவ்வளவோ விவாதம், அவர் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவரா? இல்லை. பிற்பட்டவரா? இந்த வாதங்களுக்கெல்லாம் முடிவு காண்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் அவர் பிறந்த ஊர் வாதவூர் என்பதில் வாதம் ஒன்றுமே இல்லை. மானமங்கலத்திலிருந்து இங்கு வந்து குடியேறி அமாத்தியப் பிராமணர் குலத்தில் தோன்றியவர் என்பதிலும் விவாதம் இல்லை. இவற்றையெல்லாம் விட, இந்த வாதவூர்த்தேவு என்று உலக புகழ் மாமணியின் மணிவாசகம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் என்பதிலும் வாதமே இல்லை . திருவாசகத்தைக் கசிந்து பாடிய ராமலிங்க அடிகள்.

வான் கலந்த மாணிக்கவாசக!
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்
நற் கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டமாய் இனிப்பதுவே.

என்று கூறினார். திருவாசகத்தேனை, அமுதைப் படித்து அனுபவித்தவர்களுக்குள்ளே இதைப் பற்றியும் யாதொரு விவாதமுமில்லை. ஏதோ வாதவூர் என்ற தலத்தில் பிறந்தாலும், வாதங்கள் இல்லாத பல உண்மைகளை அல்லவா எவ்லோரும் உணரும்படி செய்திருக்கிறார். அது போதும் நமக்கு.