பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வேங்கடம் முதல் குமரி வரை

அந்தத்தலம் பெயர் பெற்றது பொருத்தம் என்றே தோன்றும். அத்துடன் அங்குள்ள சோலையும் மரங்கள் நிறைந்து நன்றாக இருண்டே இருக்கும். அதனால் அதனைத் திருமாலிருஞ்சோலை என்று பாராட்டுவதும் பொருத்தம்தான். இந்தச் சோலையின் நடுவிலேதான் கோயில், கோயிலின் பிரதான வாயில் எப்போதும் அடைத்தே வைக்கப்பட்டிருக்கும். அங்குதான் கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்பன் இருக்கிறார். இந்தக் கருப்பண்னசாமிக்கு இங்கு உருவம் இல்லை. பதினெட்டாம் படிக்கருப்பன் முன்பு சத்தியம் செய்வது என்பது இன்னும் நடக்கிறது. அவனுடைய சந்நிதி முன்பு யாரும் பொய் சொல்லத் துணியமாட்டார்கள். இவனுடைய காவலின் கீழ்தான் அழகர் கோயில் அழகன் வாழ்கிறான்.

தினந்தோறும் கோயிலில் உள்ள பண்டாரத்தைப் பூட்டி, சாவியை இந்தப் பதினெட்டாம்படிக் கருப்பனிடம் கொண்டு வைத்து விடுவார்கள். மறுநாள் காலை வரும் பட்டர், சாவி எடுத்துக்கொண்டு செல்வார். இன்னும் அழகர், மதுரைக்கு, மீனாக்ஷி கல்யாணத்துக்காகப் புறப்படும்போது அவர் அணிந்துள்ள நகைளின் ஜாபிதாவை இக்காவல் தெய்வத்தின் முன்பு படித்துக் காட்டுவார்கள். அழகர் திரும்பும்போது, ஜாபிதா கருப்பன்ணர் முன் படித்துக் காட்டப்படும். இத்தனை அக்கறையுடன் கோயிலையும் கோயில் சொத்துக்களையும் பராமரிக்கும் தெய்வமாக இவர் விளங்குகிறார்.

கோயிலுள் செல்ல பதினெட்டாம்படி வாசலுக்கு வடபுறம் உள்ள மதிலின் ஒரு சுவர் திறந்திருக்கும். அதுதான் வண்டி வாசல். அந்த வாசல் வழியே நுழைந்து - கோயிலின் வெளிப்பிராகாரத்தை அடையலாம். அங்கு கோயில் முன்பு இருக்கும் பிரதான மண்டபமே கல்யாண மண்டபம். இங்குதான் நல்ல சிற்ப வடிவங்களை உடைய தூண்கள் இருக்கின்றன. இரணியன் உடல் கிழிக்கும் நரசிம்மர். வேணுகோபாலன், ரதி மன்மதன், கருடவாகன விஷ்ணு, திரிலிக்ரமர், லக்ஷ்மிவராகர் எல்லாம் நல்ல அழகான கற்சிலைகள். இவைகளைக் காண்பதற்கென்றே ஒரு நடை இக்கோயிலுக்குப் போகலாம்.