பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வேங்கடம் முதல் குமரி வரை

சேரலாம். அந்தத் தலத்துக்கு நான்கு பக்கங்களிலிருந்தும் நல்ல ரோடும் பஸ் வசதியும் உண்டு. ஊர் சென்று சேர்ந்ததும், கோயிலுக்குச் செல்லுமுன் இந்த ஊருக்கு வில்லிப்புத்தூர் என்று பெயர் வருவானேன் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.

ஒரு காலத்தில் இந்த வட்டாரம் முழுதும் செண்பக வனமாக இருந்திருக்கிறது. அங்கு இரண்டு முனிவர்கள், இறைவனது சாபத்தால் வேடர்களாகப் பிறந்து வாழ்கிறார்கள். இவர்களில் ஒருவன் பெயர் லில்லி, இன்னொருவன் பெயர் கண்டன். இளையவனான கண்டன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு புலியால் கொல்லப்படுகிறான். இதனால் வில்லி மனம் உடைந்து வாழும் போது, பரந்தாமன் வில்லியினது கனவில் தோன்றி, 'நீ இந்தக் காட்டை அழித்து இதனை ஒரு நகரம் ஆக்கு. பாண்டீ, சோழ நாடுகளிலுள்ள அந்தணர்களைக் கொண்டு வந்து குடியேற்று' என்று சொல்கிறார். அதன்படியே வில்லி காடு திருத்தி நாடாக்கிய நகரம்தான் வில்லிப்புத்தூர்.

அந்த வில்லிப்புத்தூரில் கோயில் கொண்டிருப்பவர்தான் வடபத்திரசாயி, ஆண்டாள் முதலியோர். கோயில் அமைப்பிலே முன் நிற்பது வடபத்திரசயனர் கோயில்தான். பெரிய கோபுரம் இருப்பதும் அந்தக் கோயிலுக்குத்தான் என்றாலும் இத்தலத்தில் முக்கியத்துவம் எல்லாம் ஆண்டாள் திருக்கோயிலுக்குத்தான். ஆதலால் நாமும் முதலில் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று ஆண்டாளை வணங்கிவிட்டு அதன்பின் வடபத்திர சயனரை வணங்கலாம். ஆண்டாள் கோயில் ரோட்டை விட்டுக் கொஞ்சம் உ.ள்ளடங்கியே இருக்கும். அந்தக் கோயில் வாயிலில் முதன் முதல் இருப்பது பந்தல் மண்டபம். இதனைக் கடந்து உள்ளே சென்றால் இடது கைப்பக்கம் கல்யாண மண்டபம். இதற்கு அடுத்தாற்போல் இடைநிலைக் கோபுரம், இதனைக் கடந்துதான் ஒரு வெளிப் பிராகாரம் இருக்கும். இங்குதான். ராமனுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன, வேறு முக்கியமாகப் பார்க்க வேண்டியவை ஒன்றும்