பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

161

குற்றாலத்தின் பெருமை எல்லாம் அது ஒரு சுகவாசஸ்தலம் என்பதினால் மட்டும் அல்ல. அங்குள்ள அருவியில் நீராடி மகிழலாம் என்பதினால்தான், உலகில் குற்றாலத்தை விடப் பிரும்மாண்டமான, அழகிய நீர்வீழ்ச்சிகள் எத்தனை எத்தனையோதான். என்றாலும், இப்படி உல்லாசமாக அருவிக்குள்ளேயே நுழைந்து நீராடும் வசதியுடையது அதிகம் இல்லை. அப்படிக் குளிப்பதற்கு வசதியாய், உடலுக்கும் உள்ளத்துக்குமே ஒரு மகிழ்ச்சி தருவதாய் அருவி அமைந்திருப்பதினால்தான் இந்தத் தலத்துக்கே ஒரு சிறப்பு. ஆதலால் நாமும் குற்றாலம் சென்றதும் நேரே அருவிக்கரைக்கே சென்றுவிடுவோம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்ச தூரம் சென்றதும் சிற்றாறு வரும். அதன்மேல் கட்டியிருக்கும் பாலத்தின் வழியாகக் கோயில் வாயில்வரை சென்று அதன்பின். அருவிக்கரை செல்லலாம். இப்போதெல்லாம் சிற்றாறைக் கடக்காமலேயே நேரேயே அருவிக் கரை செல்ல நல்ல பாதை போட்டிருக்கிறார்கள். நாம் அந்த வழியிலேயே செல்லலாம்.

குற்றாலமலை ஐயாயிரம் அடி உயரமே உள்ள மலை, இம்மலை மூன்று சிகரங்களையுடைய காரணத்தால் திரிகூட மலை என்று வழங்கப்படுகிறது. இச்சிகரங்களில் உயர்ந்தது 5135 அடி உயரமுள்ள பஞ்சந்தாங்கி. இம்மலையில் உள்ள காடுகளுக்குச் செண்பகக்காடு என்று பெயர் உண்டு. மலை முழுதும் நல்ல மரங்களும் செடி கொடிகளும், வளர்ந்துநிற்கும் மூலிகைகளும் நிறைந்திருக்கின்றன என்பர். இந்த மலையிலிருந்து குதித்துக் குதித்து வருகிறது. சிற்றாறு. மிக்க உயரத்தில் இருப்பது தேனருவி, அடுத்தபடியாக, செண்பகதேவி அருவி. அதன் பின்தான் நாம் வந்து சேர்ந்திருக்கும் வட அருவி. இங்கு தான் இருநூறு அடி உயரமுள்ள மலையிலிருந்து அருவி குதிக்கிறது. இந்த இருநூறு அடியும் ஒரே வீழச்சியாக இல்லாமல் இடையில் உள்ள பாறைகளில் விழுந்து வருவதால் வேகம் குறைந்து குளிப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது. முதலில் இவ்வருவி பொங்குமாங்கடலில் விழுகிறது. அங்கிருந்தே பின்னர் கீழே நீர் வழிகிறது. குளிப்பதற்கு வேண்டிய வசதிகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன.

வே.மு.கு.வ-1