பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வேங்கடம் முதல் குமரி வரை

இரண்டு பெருமான்களையும் நினைத்தே வணங்கித் திரும்பலாம். குற்றால நாதருக்கு வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் குழல்வாய் மொழி அம்மை கோயில் கொண்டிருக்கிறாள், நின்ற கோலத்தில் அங்கிருந்து காட்சி தருகிறாள். அம்மையின் கோயிலுக்குத் தென்புறத்தில்தான் தலவிருட்சமான குறும்பலா. நான்கு வேதங்களுமே தவம் செய்து இப்படிப் பலாமரம் ஆயிற்று என்பர். இப்பலா மரத்தடியிலே ஒரு லிங்கம். இம்மரத்தில் பழுக்கிற பலாப்பழத்தை எவரும் பறிப்பதில்லை, குற்றாலத்திலே உள்ள குரங்குகளே கீறித் தின்னும் என்பர். இவ்விரு கோயில்களையும் சுற்றியள்ள மேலப் பிராகாரத்திலே தான் நன்னகரப்பெருமாள், நெல்லையப்பர், மனக்கோலநாதர், நாறும்பூநாதர் முதலியோர் கோயில் கொண்டிருக்கின்றனர்

குற்றாலத்தில் இறைவன், குற்றாலம், கோவிதாஸ், சமருகம் என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே எழுந்தருளியிருத்தலால் அம்மரத்தின் பெயரே தலத்தின் பெயர் ஆயிற்று என்பர். கு என்றால் பூமியாகிய பிறவிப் பிணி, தாலம் என்றால் தீர்ப்பது. ஆகவே பிறவிப்பிணி தீர்க்கும் தலம் ஆனதால் குத்தாலம் ஆகி குற்றாலம் என்று திரிந்தது என்றும் கூறுவர். ஆதி சக்தி மூவரைப் பயந்த தலமாதலால் இத்தலத்துக்குத் திரிகூடம் என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் கூறும். அதற்கேற்பவே, கோயிலுள் வடபக்கத்தில் பராசக்திக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. இங்கே பராசக்தி யோகத்தில் இருப்பதால் இதனை யோகபீடம் என்றும், உலகம் எல்லாம் தோன்றுவதற்கு மூலமாயிருத்தலால் தரணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பராசக்தியே அரி, அயன், அரன் என்னும் மூவரையும் ஒவ்வொரு கர்ப்பத்தில் பயந்தாள் என்பதைக் குறிக்கத்தானு மாலயன் பூந்தொட்டில் இச்சந்நிதியில் ஆடிக் கொண்டிருக்கிறது.

இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்திருக்கிறார். குற்றாலத்துக்கு ஒரு பதிகமும், குறும்பலாவுக்கு ஒரு பதிகமும் பாடியிருக்கிறார்.

வம்பார் குன்றும் நீடு உயர்
சாரல் வளர் வேங்கை
கொம்பார் சோலைக் கோல வண்டு
யாழ் செய் குற்றாலம்