பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

203

இம்மங்கை தன் அழகை, கையில் ஏந்திய கண்ணாடியில் கண்டு மகிழ்கிறான். 'நிலவு செய்யும் முகமும், காண்பார் நினைவு அழிக்கும் விழியும், கலகலவென்ற மொழியும், தெய்வக்களி துலங்கு நகையும்' உடைய இந்தப் பெண்ணணங்கு, நமது உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொள்கிறாள்.

இப்படித் தேர்ந்த அழகுக்கு எல்லையாக ரதிதேவியை வடித்துக் காட்டிய சிற்பி, நல்ல அவலக்ஷணத்துக்கும் ஓர் எல்லை காட்டுகின்றான். ரதிதேவியின் சிலைக்குப் பக்கத்திலுள்ள தூணில் ஓர் அழகிய மங்கையும், ஓர் அவலக்ஷணமான மனிதனும் உருவாகியிருக்கிறார்கள். அழகே வடிவமாக இருந்த ஒரு முனிவர் அந்தப் பெண்ணின் காதலைச் சோதிக்க வேண்டி இப்படி உருமாறினார் என்றும், அந்த நிலையிலும் அவரையே மணக்க இசைந்து நின்றாள் அவள் என்பதும் கதை. இதற்கு எதிர்த் தூணிலேதான் புருஷா மிருகமும் வீமனும், இருவருக்கும். நியாயம் வழங்கும் தர்ம புத்திரரும். எல்லாம் ஏழு எட்டு அடி உயரத்தில் காத்திரமான சிறப் வடிவங்கள். இத்தாலிய பேராசிரியர் பாதர் ஹீராஸ் போன்ற அறிஞர்கள் எல்லாம் கண்டு தலைவணங்கி நின்ற சிற்ப வடிவங்கள் இவை. இக்கலைக் கூடத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருப்பவரே திருவேங்கடநாதன்.

நாமும் வேங்கடவனை அந்தத்திரு வேங்கடத்திலும் இன்னும் பல தலங்களிலும் கண்டு களித்திருக்கிறோம்.

வேங்கடமே விண்ணோர்
தொழுவதுவும், மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினை நோய் -
தீர்ப்பதுவும் - வேங்கடமே
தானவரை வீழத் தன் ..
ஆழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான்மலை

என்று வேங்கடமலையைப் பற்றியெல்லாம் தெரிந்தவர்கள்தாம் நாம் என்றாலும், இத்தனை கலைப் பிரசித்தி உடைய சந்நிதியிலே