பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

கொலு வீற்றிருக்கும் வேங்கடவனை இங்கு தான் காண்கிறோம். கோயில் கருவறையில் நிற்கும் வேங்கடவர் நல்ல சிலா வடிவினர். செப்புச் சிலையாகவும், பூதேவி சீதேவி சமேதராக நின்று கொண்டிருக்கிறார்.

இந்தக் கோயிலையும் இங்குள்ள சிலா வடிவங்களையும் நிர்மாணித்தவர், நாயக்க மன்னர்களில் புகழ் வாய்ந்தவராக இருந்த கிருஷ்ணப்ப நாயக்கரே. இத்தலம் முதலில் வேங்கடராயபுரம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர்தான் கோயிலை நிர்மாணித்த கிருஷ்ணப்ப நாயக்கர் பெயராலே கிருஷ்ணாபுரம் என்று நிலைத்திருக்கிறது. இல்லை, விஜய நகர மன்னனான கிருஷ்ண தேவராயருடைய பெயரையே இதற்கு இட்டிருக்கிறார்கள் என்றும் வரலாறு உண்டு. இங்குள்ள கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயமும், கோவில் கட்டிய மன்னனைக் கிருஷ்ண பூபதி என்றே குறிக்கின்றன. ஆதியில் கோயிலைச் சுற்றிப் பெரிய மதில்; உயரில் குடி மக்கள் பலரும் இருந்திருக்கின்றனர். கோயிலைச் சுற்றிய மதில் சிதைந்து கிடக்கிறது. ஊரில் இன்று குடியிருப்பவர்கள் வெகு சிலரே. ஊர் முழுதும் குட்டிச் சுவர்களே அதிசும். இங்கு தெய்வச் சிலையார் என்று ஒரு பெரியவர் இருந்தார் என்றும், அவர்மீது தெய்வச் சிலையார் விறலி விடு தூது என்று ஒரு நூல் பாடப்பட்டிருந்தது என்பதும் வரலாறு. எனக்கு அந்த நூல் கிடைக்கவில்லை.

எனக்கு இந்தக் கோயிலில் அதிகம் ஈடுபாடு உண்டு. கலை அழகைக் கண்டு அனுபவிக்க நான் பயிற்சி பெற்ற பள்ளியே இக் கோயில்தான். முதல் முதல் சுலைகளைப் பற்றி எழுத முனைந்ததும் இக்கோயிலில் உள்ள சிலைகளைப் பற்றித்தான். ஆதலால் தான் ஏதோ வரப்பிரசித்தியோ, புராணப் பிரசித்தியோ இல்லாத தலம் என்றாலும், உங்களையெல்லாம் இக்கலைப் பிரசித்தி உடைய கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன், சிரமத்தோடு சென்றாலும் சிலை அழகைக் கண்டு திரும்பும்போது நிறைந்த மனத் தோடேயே திரும்புவீர்கள் என்பது திண்ணம்.

பின் குறிப்பு கிருஷ்ணாபுரம் கோயில் அண்மையில் அரசால் புனருத்தாரணம் செய்யப்பட்டு நல்ல நிலயில் காட்சியளிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.