பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

ஏகாந்தலிங்கரையும் வணங்கியே திரும்பலாம். ஆழ்வார் திருநகரியில் ஒன்பது சிவன் கோயில்கள் இருந்தன என்றும். அவற்றை ஒரு சாத்தாதுவர் அழித்து ஆற்றுக்கு அணைகள் கட்டினார் என்றும், அது காரணமாக அவருக்கு வயிற்றில் நோவு உண்டாக, அதற்கு ஒரு பரிகாரமாகவே ஆற்றின் வடகரையில் காந்தீசுவரம் கட்டி ஏகாந்தலிங்கரைப் பிரதிஷ்டை செய்தார் என்பதும் வரலாறு. இந்தக் காந்தீசவரத்தில் கரூர் சித்தர் வாழ்ந்திருக்கிறார் அவரிடம் ஒரு நாய் இருந்திருக்கிறது. அது நாள்தோறும் குருகூர் வீதிகளில் விழும் எச்சிலையே உணவாக அருந்தியிருக்கிறது. ஒரு நாள் குருகூரிலிருந்து நதியைக் கடந்து வரும் போது வெள்ளத்தின் நீர்ச் சுழலில் அகப்பட்டு உயிர் இழந்திருக்கிறது. பின்னர் அதன் உயிர், ஒளி பெற்று விண்ணுலகு எய்திருக்கிறது. இதைக் கண்ட சித்தர்.

வாய்க்கும் குருகைத்
திருவீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய்
அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் பதம் அளித்தால்
பழுதோ? பெருமாள் மகுடம்
சாய்க்கும்படி கவி சொல்லும்
ஞானத் தமிழ்க் கடலே!

என்று பாடி அருள் பெற்றிருக்கிறார். குருகூரை விட்டுக் கிளம்பிக் கிழக்கே இரண்டு மைல் நடந்து மதுரகவி பிறந்த திருக்கோளூர் சென்று அங்கு கிடந்த கோலத்தில் உள்ள வைத்தமாநிதியையும் வணங்கித் திரும்பலாம்.