பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

வேங்கடம் முதல் குமரி வரை

ஆழ்வார்களுக்கு என்று ஒரு தனி சந்நிதியும் உண்டு. நம்மாழ்வாரைத் தவிர எல்லா ஆழ்வார்களும் அங்கே இருக்கிறார்கள். இத்தலத்துக்கு நம்மாழ்வார் வந்து இங்குள்ள தெய்வ நாயகரை மங்களா சாஸனம் செய்திருக்கிறாரே, அப்படியிருக்க இவரை இங்கு காணோமே என்று கேட்கத் தோன்றும். நம்மாழ்வாரது வடிவம், உற்சவர் முன்பு வைத்திருக்கும் சடகோபத்திலே (சடாரியிலே) பொறிக்கப்பட்டு அவர் விசேஷ மரியாதையுடன் இருக்கிறார் என்பார்கள், அங்கே செல்லும்போது அவரைத் தரிசித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு இடமும் கடந்துதான் அர்த்த மண்டபத்தக்கு வர வேணும், அந்த மண்டபத்தக்கு வெளியே சந்நிதியை நோக்கிக் கூப்பிய கையராய் சந்நிதிக் கருடன் நிற்பார். கருவறையில் இருப்பவரே தோத்தாத்திரி - பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி இருமருங்கும் இருப்ப, ஊர்வசியும் திலோத்தமையும் சாமரை வீசிக்கொண்டு நிற்பர். தங்க மயமான ஆதிசேடன் குடை பிடிக்க, வைகுந்தத்தில் மகாவிஷ்ணு இருக்கும் கோலத்தில் காணலாம். பிருகு, மார்க்கண்டேயர், சந்திர சூரியர் எல்லாரும் இருப்பார்கள். வெளியே விஷ்வக் சேனர். ஆகப் பதினோரு பேர் ஏகாசனத்தில் இருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இத்திருக்கோலக் காட்சியை ஒரு கவிஞர் அழகாகப் பாடுகிறார்.

திருமலியும் வைகுந்தப் பெருநகரில்
இலங்கும் திருக்கோலம்
நிலத்தில் உள்ளார் திருஉறவேபணியச்
செல்வ நலம், அருளும் உயர்
செங்கமல மகளும் திருமருவு
பொறுமையுருச் சிறந்த நிலமகளும்
உருமலிய இருபாலும் உவந்தனர்
வீற்றிருப்ப உயர்வுறவே
உயர்ந்து பொருள் உணரமுயல் பிருகு
ஒப்புயர்வில் பெருந்தவத்து மார்க்கண்டன்
இருவர் உரிமையினால் இருபுறமும்
கரங்குவித்து நிலவக்