பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

வேங்கடம் முதல் குமரி வரை

நம்பி சமாதானம் செய்து, ஒரு பாட்டின் கான பலனைத் தத்தம் செய்யுமாறு நம்பாடுவானிடம் சொல்கிறார். இதனாலேயே இத்தலத்தில் கைசிக ஏகாதசி விசேஷச் சிறப்பாக நடக்கிறது என்பர். கொடி மரம் நகர்ந்ததற்கும், கைசிக ஏகாதசி ஏற்பட்டதற்கும் காரணம் தெரிந்துகொண்டு நேரே நம்பியைத் தரிசிக்கச் செல்லலாம். குலசேகரன் மண்டபத்துக்கு முந்திய பத்தியில் ஒரு பெரிய மணி தொங்குகிறது. அந்த மணியிலே ஒரு பாடல் பொறித்திருக்கிறது.

செய்துங்க நாட்டுச் சிறைவாய்மன்
ஆதித்தன் தென்வஞ்சியான்
லியலொன்ற சில கலையாளன்
கன்னி விசாகம் வந்தோன்
நயமொன்று கொல்லம் அறுநூற்று
நாற்பத்து நாலில் அன்பால்
அயனும் பணிய மணியளித்தான்
நம்பிக்கு அன்புகொண்டே

என்பது பாட்டு, இதிலிருந்து திருவிதாங்கோட்டு மன்னன் ஒருவன் நம்பியின் பக்தனாய் விளங்கி, இம்மணியைக் கோயிலுக்கு அளித்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். குலசேகரன் மண்டபத்தில் நின்றே மூலவராய் நின்ற அழகிய நம்பியைத் தரிசிக்கலாம். நல்ல அழகான வடிவம். அவரது மேனி, உள்ளே சிலையும் வெளியே சுதையுமாக இருக்கிற கோலம். அதனால் தைலக் காப்புத்தான் நடக்கிறது. உபய நாச்சியார், மார்க்கண்டேயர், பிருகு, எல்லாம் உடன் எழுந்தருளியிருக்கிறார்கள். கருவறையை அடுத்த கட்டில்தான் வைஷ்ணவ நம்பி என்ற உத்சவர் இருக்கிறார். இவர் பக்கலில் உபயநாச்சியார், நீளாதேவி, குறுங்குடி வல்லித் தாயார் எல்லாம் இருக்கிறார்கள். இவரை வைஷ்ணவ நம்பி என்பானேன் என்றால் அதுதான் உடையவர் இட்ட தாஸ்ய நாமம் என்பார்கள். ஸ்ரீ பாஷ்ய காரராம் ராமனுஜர் இத்தலத் துக்கு வந்த போது இந்த நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அந்த