பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

அர்த்த ஜாம பூஜை கிடையாது. ஆனால் பூஜா திரவியங்களைச் சேகரித்து வைத்து விட்டு அர்ச்சகர்கள் நின்று கொள்வர். அர்த்தஜாம பூஜை அமராபதியால் நடப்பதால் மாலை பூஜை செய்தவர் மறுநாள் காலை கடைதிறக்கக் கூடாது என்பது கட்டளை. இது காரணமாக இங்கு பூஜைக்கு இருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காலையில் கடை திறக்கும்போது 'அகம் கண்டது புறம் கூறேன்' என்று சத்தியம் செய்தே வாயில் திறக்க வேணும் என்பது உத்தரவு. தேவேந்திரன் கட்டளையிட்டபடியே இங்கு தாணுமாலயருக்கு, இக்கோயிலைக் கட்டினான் என்பது கர்ணபரம்பரை.

சேர மன்னர் பலர் இக்கோயிலை விரிவாக்கியிருக்கின்றனர். மண்டபங்கள், கற்சிலைகள் எல்லாம் விஜயநகர நாயக்க மன்னர்களால் மேலும் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும், இத்தலத்தில் தங்கள் புனிதத்தன்மையை நிலை நிறுத்தக் கொதிக்கும் நெய்யில் கை முக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இல் வழக்கத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாங்கூரையாண்ட சுவாதித் திருநாள் ராமவர்ம ராஜாவே நிறுத்தியிருக்கிறார். இச்சுசீந்திரம் தாணுமாலயர் கோயில், திருவாங்கூர் மன்னர் ஆட்சியிலே இருந்து வந்திருக்கிறது. நாஞ்சில் நாடு தமிழ் நாட்டோடு இணைந்த போதுதான் இக்கோயிலும் தமிழகத்தோடு இணைந்திருக்கிறது. அது காரணமாகவே நாமும் இக்கோயிலுக்குச் சென்று, தாணு, மால், அயன் மூவரும் இணைந்த திருக்கோலத்தைக் கண்டு வணங்கும் பேற்றைப் பெறுகிறோம். கோயிலை விட்டு வெளியே வரும்போது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடிய சுசிந்தை மாலைப் பாடலையும் பாடிக் கொண்டே வரலாம்.

திங்கள் உன் கருணை காட்டும் - .
தீக்கண் உன் வெகுளி காட்டும்
கங்கை உன் பெருமை காட்டும்
கடுவும் உன் ஆண்மை காட்டும்
சிங்கம் நுண் இடையைக் காட்டச்
சிறையனம் நடையைக் காட்டும்
மங்கையோர் பாகா! தாணு
மாலயா சுசிந்தை வாழ்வே

என்பது பாடல் பாடலைப் படிக்கப் படிக்கச் சுவையாக இருப்பதில் வியப்பில்லை !