பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31. கன்னிக் குமரி

'தவம் என்பது ஒருவனுடைய மனம் முழுவதும் ஒரே நோக்கத்தில் ஈடுபட்டு வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சி. அந்த முயற்சியில் இந்திரிய ஆசைகளை ஒடுக்குவதற்கான பல பயிற்சிகள் அடங்கியுள்ளன. அந்தப் பயிற்சிகள் எல்லாவற்றுக்கும், சகிப்புத்தன்மையும் கலங்காத உள்ளம் உடைமையுமே அடிப்படை. இந்தச் சகிப்புத் தன்மையில் நிலைத்து நின்றால்தான் ஆன்ம சக்திகள் வளர்ந்து தவ வலிமையும் ஞானமும் உண்டாகும். அதன் பின் ஒருவன் நாடுகின்ற மெய்ப்பொருள் கிட்டும்' என்று தவத்தின் பெருமையைப் பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அன்று இமவான் மகளான உமை கைலையில் உள்ள பரமேச்சுவரனை நோக்கித் தவம் கிடக்கிறாள், அவனையே காதலனாக அடைய. அந்தத் தவ மகிமையால் அவனையே கணவனாகப் பெறுகிறாள். ஆனால் அவளே இந்திய நாட்டின் தெற்குக் கோடியில் குமரிமுனையில் நின்று தவம் செய்கிறாள்.

இந்தத் தவம் மக்களையெல்லாம் உய்விக்க என்று அறிகிறபோது நாம் அன்னையின் கருணையை வியக்கிறோம். அன்னைக்கும் அத்தனுக்கும், தலம் தோறும் திருக் கல்யாணம் நடத்தி, அந்தக் கல்யாணக் கோலத்தை எல்லாம் கண்டு மகிழ்ந்த தமிழன், அன்னையை ஒரு நல்ல தவக் கோலத்திலும் நிறுத்திப் பார்க்க எண்ணுகிறான். கணவன் மனைவி குழந்தை குட்டிகள் என்று ஏற்பட்டு விட்டால், அன்னைக்கு உலக மக்களைப் பற்றி, அவர்தம் குறைகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட நேரம் ஏது? அவள் கன்னிப் பெண்ணாக-எண்ணியதையெல்லாம் பெறும் தவம் செய்யும் தெய்வமாக இருந்தால் வேண்டுவன எல்லாம் கொடுக்க இயலும் அல்லவா? ஆதலால் தான் அன்னை பகவதி என்றும் கன்னியாக,