பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

வேங்கடம் முதல் குமரி வரை

கண் குளிரத் தரிசித்துவிட்டு திரும்பும்போது நம்முடைய உள்ளம் நிறைவுபெறும்; உடல் புளகிக்கும்.

இவளது அழகை அறிந்த அந்தச் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன், இவளை மணம் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்காக தேவர்களைக் கூட்டி தம் விருப்பத்தை வெளியிடுகிறார். தேவர்கள் எல்லாம் வந்து கூடிய இடமே சுசீந்திரத்தில் கன்னியம்பலம் என்று வழங்குகிறது. தாணுமாலயன் விருப்பம் அறிந்த தேவர்கள் மனம் கலங்குகிறார்கள். கன்னிக்குமரி திருமணம் செய்து கொண்டால் அவள் தவம் பழுதாகிவிடுமே, பின்னர் அசுரர்களை அழிக்க முடியாதே என்று வருந்துகின்றனர். இந்தச் சமயத்தில் நாரதர் வந்து, தேவர்களையெல்லாம் சமாதானம் செய்து. தாமே திருமணத்தை முன்னின்று செய்து வைப்பதாகச் சொல்கிறார். அவர் தாணுமாலயனிடம், கல்யாணத்துக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார். ஒன்று, கண்ணில்லாத் தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லாக் கரும்பு, இதழ் இல்லா புஷ்பம் இவற்றைச் சீதனப் பொருள்களாகக் கொண்டு வரவேண்டும் என்பது. இரண்டாவது, திருமண முகூர்த்தம் சூரிய உதயத்தில்; அதற்கு ஒரு நாழிகை முன்னமேயே மணமகன் மணவறைக்கு வந்துவிடவேண்டும் என்பது. மணமகனான தாணுமாலயன் இதற்கெல்லாம் அஞ்சாமல் கேட்ட பொருள்களையெல்லாம் வண்டி வண்டியா அனுப்பி வைக்கிறார். இடையில் உள்ள ஐந்து மைல் தூரத்தைக் கடக்க அர்த்த ராத்திரியே புறப்பட்டு விடுகிறார். நாரதர் பார்க்கிறார். உடனே சேவல் உருவெடுத்து சூரிய உதயத்தை அறிவிக்கும் உதயராகத்தைக் 'கொக்கரக்கோ' என்று கூவி அறிவித்து விடுகிறார். முகூர்த்த நேரம் தவறிவிட்டது. தாம் வழுக்கி விட்டோம் என்ற அவமானத்தோடேயே தாணுமாலயன் மேற் செல்லாமல் சுசீந்திரத்துக்குத் திரும்பி விடுகிறார்; இப்படி இவர் திரும்பிய இடமே இன்றும் வழுக்குப் பாறை என வழங்குகிறது.

சுசீந்திரத்துக்குக் கிழக்கே ஒரு மைலில் இந்த வழுக்குப் பாறை இருக்கிறது. இதில் சேவற் கோழியின் கால் தடமும், தாணுமாலயனது திருவடித் தடமும் காணப்படுகின்றன என்பர். இப்படி பகவதி