பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. விஜயாலய சோழீச்சரம்

தமிழ் நாட்டின் சரிதமே, அங்கிருந்து அரசு புரிந்த சேர சோழ பாண்டியர்கள் சரிதம்தானே? அதிலும் தமிழ் நாட்டில் பெரிய கோயில்களைக் கட்டி கலை வளர்த்த பெருமையெல்லாம் சோழ மன்னர்களையே பெரிதும் சேரும். சங்க இலக்கியங்களில் இச்சோழ மன்னர் புகழ் பரக்கப் பேசப்படுகிறது புலவர் பெரு மக்களால். இமயத்தைச் செண்டாலடித்த கரிகாலன், தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன், குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், போர்வைக்கோப பெருநற்கிள்ளி, வேல் பஃறடக்கை பெருவிறற்கிள்ளி, ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலிய அரசர் பெருமக்களுக்குப் பின் சோழப் பேரரசு அவ்வளவு புகழ் வாய்ந்ததாக இல்லை, திரும்பவும் சோழர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்களில் முதல்வனாக விளங்குபவன் விஜயாலயச் சோழனே.

இவன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்தவன். குமராங்குசன் என்பவனது புதல்வன். கி.பி. 846-ம் ஆண்டில் இவன் முத்தரையர் மரபினனான ஒரு குறுநில மன்னனைத் தாக்கி, அவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தஞ்சையைக் கைப்பற்றியிருக்கிறான். இவன் தன் பகைவர்களாகிய பேரரசர்களோடும் சிற்றரசர்களோடும் நிகழ்த்திய போர்கள் பல. இப்போர்களினால் இவன் மார்பில் 96 புண்கொண்ட தழும்புகள் இருந்தன என்று புலவர்கள் இவனைப் பாடியிருக்கிறார்கள்.

எண் கொண்ட தொண்ணூற்றின்
மேலும் இருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலன்

என்றே விக்கிரம சோழன் உலாவில் இவன் புகழ் பேசப்படுகிறது. இவனே தஞ்சையைச் சோழ சாம்ராஜ்யத்