பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வேங்கடம் முதல் குமரி வரை

தலைநகராக ஆக்கியவன். புதுக்கோட்டை ராஜ்யத்தில் நார்த்தாமலை என்ற ஊருக்குத் தென்மேற்கே உள்ள குன்றின் மேல் ஒரு கோயிலைக் கட்டித் தன் பின் வந்த ராஜராஜன் முதலிய சோழ மன்னர்களுக்கு எல்லாம் கோயில் கட்ட வழி காட்டியிருக்கிறான். அந்தக் கோயிலையே சரித்திர ஏடுகள் விஜயாலய சோழீச்சரம் என்று குறிக்கின்றன. அது சோழர்கோயில் கட்டிடக் கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதன் சரித்திரப் பிரசித்திக்காகவே அதனையும் இத்தொடரில் சேர்த்திருக்கிறேன். இன்னும் இந்தப் புதுக்கோட்டை, வட்டாரத்தில் சரித்திரப் பிரசித்தி உடைய சில கோயில்களையும் காட்டலாம் அல்லவா? அதற்காகவே இந்த நார்த்தாமலை விஜயாலய சோழீச்சரத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.

தொண்டைமான் புதுக்கோட்டை லயனில் நார்த்தா மலை ஸ்டேஷனில் இறங்கி இரண்டு மைல் நடந்தால் நார்த்தாமலைக்கு வந்துசேரலாம். இங்கு எட்டுக் குன்றுகள் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கின்றன. மலையடிவாரத்தில் ஊர் இருக்கிறது. சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற போது, அந்த மலையினின்றும் பெயர்ந்து விழுந்த ஒரு சிறு துண்டே இம்மலைச் சிகரம் என்பர். இந்த மலையில் சிறந்த மூலிகைகள் கிடைப்பதே இதை வலியுறுத்துகிறது. நாரதர் மலையே நார்த்தா மலையாயிற்று என்றும் ஒரு கூற்று. இது எல்லாம் இல்லை. நகரத்தார் என்னும் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் காலிரிப்பூம்பட்டினத்திலிருந்து தெற்கு நோக்கி வந்தபோது முதல் முதல் தங்கிய இடம் ஆனதால் இது நகரத்தார் மலை என்ற பெயரோடு விளங்கி, பின்னர் நார்த்தாமலை என்று குறுகியிருக்கிறது என்றும் ஒரு வழக்கு.

இம்மலையின் மேல்பகுதி மேலமலை என்று அழைக்கப்படுகிறது. அந்த மலையில் இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. ஒன்று சமணர் குடைவு என்றும் மற்றொன்று பழியிலி ஈச்சரம் என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. இரண்டும் பல்லவமன்னன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்த குடைவரைகள் போலவே இருக்கின்றன. சமணர் குடைவை