பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

33

சுண்ணாம்பு கூட உபயோகிக்காமல் செவ்வையாக இணைக்கப்பட்டிருக்கின்ற இக்கற்களைப் பார்க்கும்போது அக்காலத்திய கட்டிடக் கலைஞர்களது மேதாவிலாசம் நன்கு விளங்கும். கோயில் கட்டிடக் கலையை ஆராய விரும்புபவர்களுக்கு, இந்தக் கோயில் ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். விஜயாலய சோழீச்சரம் என்னும் இக்கோயிலை உள்ளடக்கிய நார்த்தா மலையில் வேறு பார்க்க வேண்டியவை ஒன்றும் இல்லைதான். என்றாலும் ஊரை விட்டுக் கிளம்புமுன் கிராமத்தின் நடுவில் உள்ள ஜம்புகேசுவரர் கோயிலுக்கு, மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தே திரும்பலாம். மாரியம்மன் சிறந்த வரப்பிரசாதி. அங்கு நடக்கும் திருவிழாவும் மிகப் பிரபலமானது அந்த வட்டாரத்திலே.

புதுக்கோட்டை வட்டாரத்தில் இன்னும் சில கோயில்கள் உண்டு.

புதுக்கோட்டைக்கு மேற்கே பத்து மைல் தூரத்தில் அன்னவாசல் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு சென்று ஓர் ஆளைத் துணை கூட்டிக்கொண்டு கொஞ்சம் காட்டுவழி எல்லாம் கடந்தால் தமிழ்நாட்டின் அஜந்தாவான சித்தன்னவாசல் மலையடிவாரம் வந்து சேரலாம். இங்கே வடகிழக்காகப் பரவியுள்ள ஒரு பெரிய குன்றில் ஏழடிப்பட்டம் என்னும் சமணக்குகைகள் இருக்கின்றன. அந்தச் சமணர்கள் சித்தர்களாக இருந்திருக்கிறார்கள் இங்கு மேற்கே பார்க்க அமைக்கப்பட்ட குடைவரையில்தான் அஜந்தா சித்திரங்களைப் போல அழியாத சித்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் மலைமேல் ஏறித்தான் இக்குடைவரையை அடைய வேணும்.

பின்புறம் ஒரு கருவறையும் முன்புறம் ஒரு மண்டபத்துடலும் கூடியது அது. முன் மண்டபத்திலே இரண்டு பார்சவ நாதரது உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறத்துத் தூண்களிலே மகேந்திரவர்மனும் நாட்டியப் பெண் ஒருத்தியும் சித்திரத்தில் தீட்டப்பட்டிருக்கிறார்கள், முன் மண்டப விதானத்திலே ஜைனர்கள் சொல்லும் பரமபதம் என்னும் சாமவ சரவணப் பொய்கை

வே.முத.வ-3