பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வேங்கடம் முதல் குமரி வரை

வேணும். இந்தக் கோயிலையும் ஒரு சிறு கோபுரம் அழகு செய்யும். வாயிலைக் கடந்தால் முன் மண்டபத்தில் பானு உமாபதீசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கியபடி இருக்கும். இவற்றைக் கீழைக் கோயில் என்பார்கள். இங்கேயே ராஜ ராஜேஸ்வரி தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறாள். இதற்குக் கொஞ்சம் மேலேதான் வேணுவன ஈசுவரி கோயில், இதையும் கடந்துதான் சத்தியகிரி ஈசுவரர் சந்நிதி இருவருமே குடைவரையுள் இருப்பவர்தான். பெருமாளைக் குடைந்தெடுத்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனே சத்தியகிரியாரையும் குடைந்து அமைத்திருக்கிறான். குடைவரையில் மேல் கோடியில் லிங்கம் இருக்கிறது. மலையைக் குடைந்து நிர்மாணிக்கப்பட்டவரே இவர். இவரது கருவறை, அதற்கு முன்னுள்ள அர்த்தமண்டபம், அங்குள்ள நந்தி எல்லாம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டவை. இங்குள்ள தூண்கள் அடியில் உருளையாகவும் நடுவில் எட்டுப் பட்டை போட்டவையாகவும் இருக்கும். பல்லவர்காலக் குடைவரைதான் என்பதற்கு இது ஒரு சான்று. இங்குள்ள துவாரபாலகர்களுக்கு எல்லாம் இரண்டே கைகள் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. வலம்புரி விநாயகர் வேறே இங்கு உருவாகியிருக்கிறார். முன்னர் குடுமியான் மலையில் கண்டது போல் இங்கே சங்கீத வின்னியாசக் கல்வெட்டு ஒன்று உண்டு, ஆனால் அவையெல்லாம் சிதைந்துபோய்விட்டன. இங்கு சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள் பல இருக்கின்றன.

வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயான நாயகர் ஆவார் தோழி!
தாமரைக் கண்கள் இருந்தவாறு

என்று மங்கை மன்னர் சத்தியமூர்த்தியையே பாடியிருந்தாலும், தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெறாத சத்திய கிரீசுவரருக்குமே இப்பாடலை ஏற்றலாம். ஏற்றித் துதித்து வணங்கித் திரும்பலாம்.

இக்கோயிலில் கல்வெட்டுகள் நிரம்ப இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது குடுமியான் மலையில் உள்ளதுபோல் சங்கீத