பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருக்கிறான். பரஞ்சோதியாருடைய கைங்கரியத்தைப் பாராட்டியிருக்கிறான். ஆனால் பரஞ்சோதியாருக்கு மட்டும் ஒரு சிறு கவலை. தம்மைப் போல் கணபதியின் பேரில் காதல் கொள்பவர்கள் யாராவது, தாம் வாதாபியிலிருந்து பெயர்த்தெடுத்து வந்தது போலவே, செங்காட்டாங்குடியிலிருந்தும் பெயர்த்து எடுத்தச் செல்லலாம் அல்லவா என்பதுதான், பரஞ்சோதியாருடைய கவலையை உணர்ந்திருக்கிறான் நரசிம்மவர்மன். 'அப்படி நடக்காது, கவலையே வேண்டியதில்லை' என்று அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறான்.

என்றாலும், இந்த எண்னம் அவன் உள்ளத்தில் ஊன்றி நின்றிருக்கிறது. தென்னாடு வந்த பல்லவ மன்னன். தன் தந்தை மகேந்திரவர்மன், திருச்சி, சித்தன்னவாயில் முதலிய இடங்களில் கட்டிய குடைவரைக்கோயிலையும் தீட்டிய சித்திரங்களையும் காண விரைந்து ஒரு சுற்றுப் பிரயாணத்தைத் தொடங்கியிருக்கிறான். அந்தப் பிரயாணத்தில்தான், இன்றைய காரைக்குடியை அடுத்த குன்றக்குடியிலிருந்து மேற்கு நோக்கி நடந்திருக்கிறனான். அப்படி நடந்தவன் வழியில் ஒரு சிறிய குன்றைக் கண்டிருக்கிறான். ஆம்! இந்தச் சிறிய குன்றில் ஒரு கணபதியைச் செதுக்கி வைத்துவிட்டால், அசைக்க முடியாதவராக அமர்ந்து விடமாட்டாரா அவர் என்று எண்ணியிருக்கிறான். அவ்வளவுதான்; அவன் எண்ணத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்கள் உடன் வந்த சிற்பிகள். மலையைக் குடைவது என்பதுதான் அவர்களுக்கு எளிதான காரியம் ஆயிற்றே. குடைவரைக் கோயில் ஒன்று உருவாகி விட்டது. அங்கு தேசிக விநாயகப் பிள்ளையார்-கற்பக விநாயகர், அசையாத பிள்ளையாக, அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்து விட்டார். இருவருக்கும் இடையில் சிற்பிகள் நரசிம்மவர்ம பல்லவனது திருவுருவையுமே செதுக்கிநிறுத்தி விட்டார்கள். அன்று முதல் இங்கு பிள்ளையார் ஆதிக்கம் செலுத்த முற்பட்டுவிட்டார். ஈக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூரின் பெயர் அன்று முதல் பிள்ளையார்பட்டி என்றே நிலைத்து விட்டது. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் உருவான கதை இப்படித்தான்