பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வேங்கடம் முதல் குமரி வரை

சுக்ல சதுர்த்தியில் விரதபூர்த்தி செய்து விநாயகரைத் தொழுதால் பெறற்கரிய பேறுகளையெல்லாம் பெறலாம் என்பதுதான் மக்கள் நம்பிக்கை.

பிள்ளையார் பட்டியில் சதுர்த்தி விரதம் எல்லோராலும், சிறப்பாகப் பெண்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருஷம் முழுதும் -ஆம், இருபத்து நான்கு சதுர்த்திதிதியிலும் விரதம் அனுஷ்டித்தவர்கள் எல்லாம், வருஷக் கடைசியல், ஆவணி மாதம் சுக்லபக்ஷ, சதுர்த்தியன்று விரத பூர்த்தி செய்கிறார்கள். அன்று பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் சந்நிதியில் வருஷம் முழுதும் விரதம் அனுபேடித்த பெண்கள் ஒன்று கூடுகிறார்கள். விரதபூர்த்தியை செய்ய பேந்திருக்கும் பெண்கள் எத்தனை பேரோ அத்தனை குடங்கள், ஆம் நானூறு ஐந்நூறு பேர்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒன்று என்று குடங்கள் வைத்து ஒவ்வொரு குடத்தினுள்ளும் ஒவ்வொரு வெள்ளிப் பிள்ளையாரையும் போட்டுக் குடத்தில் தண்ணீர் நிரப்பிப் பூசனை புரிகிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்யொரு குடம் எடுத்து அந்தக் குடத்தில் உள்ள தண்ணீராவ் அபிஷேகம் செய்து கொள்கிறார்கள். நனைந்த உடலோடும், உடையோடும் பிள்ளையார் சந்நிதியிலே விழுந்து வணங்கி, எழுந்து நின்று தீப ஆராதனையைக் கண்டு களிக்கிறார்கள். அன்று கோயிலில் கொடுக்கும் பிரசாதமாகிய மோதக நைவேத்தியத்தை மட்டுமே அருந்துகிறார்கள். இப்படி விரதம் அனுஷ்டித்து விரத பூர்த்தி செய்கின்ற பெண்கள் எல்லாருக்கும் அவரவர்கள் பிராத்தனை செய்து கொண்ட நலங்களையும் பெறுகிறார்கள். பெண்கள் மட்டும் என்ன- ஆண்களுமே இந்தச் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் என்ரிய எண்ணியாங்கு எய்துவர்.

சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்பும் எல்லோரும் பிள்ளையார் பட்டிக்குப் போகலாம். அதோடு பல்லவர் காலத்தில் சிற்பக்கலை எப்படியெல்லாம் வளர்ந்தோங்கியது என்று கண்டறிய இயலும், அதற்கு மேல் இந்தக் குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார் எப்படி மற்ற தமிழ் நாட்டுப் பிள்ளையார் திரு உருவங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதும் தெரியும்.