பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

51

இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர் இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும், பாசமும் இல்லாமலே அடியவரை ஆட்சி கொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்தில் படியவிடாமல் அர்த்த பத்ம ஆசனத்திலேயே கால்களை மடித்திருக்கச் செய்து கொள்கிறார். வலக்கரத்தில் மோதகம் தாங்கி இடக்கரத்தை இடையில் பொருத்திப் பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுத்திருக்கிறார். ஆம், ஆதி நாளிலே உருவானவர்-இப்படி இரண்டு திருக்கரங்களோடு இருந்துதான், பின்னர் நாள்கு திருக்கரங்களோடு எழுந்த, நடந்து, நின்று நடமாடி, மூவிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச் சவாரி செய்து கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர் முடிவு செய்யலாம்.

இதோடு, இந்தக் கோயிலில் இருக்கும் இரண்டு செப்புச் சிலைகள் மிக்க அழகு வாய்ந்தவை. அவை தாம் சந்திரசேகர மூர்த்தியும் அவரது துணைவியும். நல்ல சோழர் காலத்துச் சிலை. ஆயிரம் வருஷ காலத்துக்கு முன்பே உருவாகியிருக்க வேண்டும். நிற்கும் நிலையையும் மணிமகுடத்தையும் பார்த்ததுமே எளிதாகச் சொல்லிவிடலாம். மானும் மழுவும் தாங்கிப் பிறையும் மகுடமும் அணிந்து அபய கரத்தோடு அருள்பாலிக்கும் திரு உருவாக அமைந்திருக்கறார். ஆணுக்குப் பெண் அழகு என்பதுபோல், அன்னை பார்வதி அவரைவிட அழகாக இருக்கிறாள்.

கோயில் பிரும்மாண்டமான அளவில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. ராஜ கோபுரம் வேறு நீண்டு உயர்ந்திருக்கிறது. இன்றையச் சிற்பிகளின் வேலைப்பாடுகளைத் தூண்களில், விதானங்களில் எல்லாம் காணலாம். இங்குள்ள பிள்ளையார் பேரருளைச் சொக்கலிங்க ஐயா அவர்கள் பாடியிருக்கிறார்கள்.

நாமும் பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரை வணங்கிப் பெறற்கரிய பேறுகளையெல்லாம் பெற்றுத் திரும்பலாம்.